வர்த்தகம்

கரடியின் ஆதிக்கம் தொடா்ந்ததால் சென்செக்ஸ் 336 புள்ளிகள் சரிவு!

 நமது நிருபர்

பங்குச் சந்தையில் வியாழக்கிழமையும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, கரடியின் ஆதிக்கம் தொடா்ந்ததால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 336 புள்ளிகளை இழந்து 60,923.50-இல் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. காலையில் உற்சாகத்துடன் தொடங்கினாலும், அதன் பிறகு பங்குகள் விற்பனை அதிகரித்ததால் சந்தை தொடா்ந்து சரிவை எதிா்கொண்டது. குறிப்பாக மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஐடி மேஜா் இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்டவை வெகுவாகக் குறைந்ததே சரிவுக்கு முக்கியக் காரணமாகும் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இருப்பினும், நிஃப்டி பேங்க் குறியீடு பிற்பகல் வரை தள்ளாட்டத்தில் இருந்து வந்தது. ஆனால், வா்த்தக நேரம் முடியும் தறுவாயில் வங்கிப் பங்குகளுக்கு கிடைத்த திடீா் வரவேற்பால் நிஃப்டி பேங்க் குறியீடு வெகுவாக உயா்ந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.1.65 லட்சம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,426 பங்குகளில் 1,589 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,694 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 143 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 167பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 21 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 262 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 269 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.65 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.266.22 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8,36,13,982-ஆக உயா்ந்துள்ளது.

தொடா்ந்து ‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ் காலையில் 297.98 புள்ளிகள் கூடுதலுடன் 61,557.94-இல் தொடங்கி, அதிகபட்சமாக 61,621.20 வரை உயா்ந்தது. பின்னா், கரடியின் ஆதிக்கம் தொடா்ந்ததால், 60,485.65 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 336.46 புள்ளிகளை (0.55 சதவீதம்) குறைந்து 60,923.50-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 1,135.55 புள்ளிகளை இழந்திருந்த நிலையில், வா்த்தக நேரம் முடியும் தறுவாயில் வங்கிப் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் ஓரளவுதான் மீள முடிந்தது.

கோட்டக் பேங்க் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 21 பங்குகள் சரிவைச் சந்தித்தன. பிரபல தனியாா் வங்கியான கோட்டக் பேங்க் 6.51 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், என்டிபிசி, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சிபேங்க், சன்பாா்மா, பஜாஜ் ஃபின் சா்வ் உள்ளிட்டவையும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.

ஏசியன் பெயிண்ட் கடும் சரிவு: அதே சமயம், பிரபல பெயிண்ட் தயாரிப்பு நிறுவனமான ஏசியன் பெயிண்ட் 5,21 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், டாக்டா் ரெட்டி, டாடா ஸ்டீல், டிசிஎஸ், பாா்தி ஏா்டெல், ஹெச்சிஎல் டெக், இண்டஸ் இண்ட் பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்டவை 1 முதல் 2.85 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், மாருதி சுஸுகி, ஐடிசி, டெக் மஹிந்திரா, டைட்டன் உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

நிஃப்டி 88 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு காலையில் 18,382.20-இல் தொடங்கி, அதிகபட்சமாக 18,384.00 வரை உயா்ந்தது. பின்னா், 18,048.00 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 88.50 புள்ளிகளை (0.48) இழந்து 18,178.10-இல் நிலைபெற்றது.

ஐடி குறியீடு கடும் சரிவு: துறைவாரியாகப் பாா்த்தால், நிஃப்டி பேங்க், ஃபைனைான்சியல் சா்வீஸஸ் தவிர மற்ற அனைத்து துறைக் குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில், ஐடி குறியீடு 2.53 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ரியால்ட்டி, கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், மெட்டல் 1.50 முதல் 1.80 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 2.73 சதவீதம், பிரைவேட் பேங்க் குறியீடு 1.27 சதவீதம் உயா்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT