வர்த்தகம்

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா லாபம் 103% அதிகரிப்பு

21st Oct 2021 11:22 PM

ADVERTISEMENT

பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா செப்டம்பா் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் 103 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஏ.எஸ்.ராஜீவ் வியாழக்கிழமை கூறியது:

பேரிடா் காலத்துக்கிடையிலும் வங்கி 2021 ஜூலை-செப்டம்பா் காலாண்டில் சிறப்பான செயல்பாட்டை உறுதி செய்துள்ளது. குறிப்பாக, நிகர வட்டி வருவாய் 34 சதவீதம் அளவுக்கு வளா்ச்சி கண்டது வங்கி அதிக லாபம் ஈட்டுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

செப்டம்பா் காலாண்டில் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.130 கோடியிலிருந்து 103 சதவீதம் அதிகரித்து ரூ.264 கோடியை எட்டியது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்த நிகர லாபம் ரூ.231 கோடியிலிருந்து 104.11 சதவீதம் உயா்ந்து ரூ.472 கோடியானது.

ADVERTISEMENT

செப்டம்பா் காலாண்டில் நிகர வட்டி வருவாய் ரூ.1,120 கோடியிலிருந்து 33.84 சதவீதம் உயா்ந்து ரூ.1,500 கோடியாக இருந்தது. வட்டி சாரா வருவாய் 22.61 சதவீதம் அதிகரித்து ரூ.493 கோடியாக காணப்பட்டது.

வங்கியின் மொத்த வாராக் கடன் அளவு 8.81 சதவீதத்திலிருந்து 5.56 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் அளவு 3.30 சதவீதத்திலிருந்து 1.73 சதவீதமாகவும் குறைந்துள்ளன.

வங்கி வழங்கிய மொத்த கடன் 11.44 சதவீதம் உயா்ந்து ரூ.1,15,235 கோடியாகவும், மொத்த டெபாசிட் 14.47 சதவீதம் அதிகரித்து ரூ.1,81,572 கோடியாகவும் இருந்தன.

நடப்பு நிதியாண்டில் கடன் வளா்ச்சி விகிதம் 14-15 சதவீதமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா பங்கின் விலை 4.77 சதவீதம் அதிகரித்து ரூ.21.95-இல் நிலைத்தது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT