வர்த்தகம்

உச்சத்தில் லாபப் பதிவு: 7 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி

20th Oct 2021 03:16 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்தது. லாபப் பதிவு காரணமாக மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகியவை சரிவில் முடிந்தன. இதைத் தொடர்ந்து, 7 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
 பங்குச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், இறுதியில் சரிவில் முடிந்தது. சந்தை உச்சத்தில் இருந்த நிலையில் லாபப் பதிவு அதிக அளவில் இருந்தது. குறிப்பாக ரியால்ட்டி, எஃப்எம்சிஜி, பிஎஸ்யு பேங்க் பங்குகளில் அதிக அளவில் லாபப் பதிவு இருந்தது. இதனால், சந்தையில் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளிலும் லாபப் பதிவு இருந்தது. சந்தையில் அடுத்தடுத்து முன்னணி நிறுவனங்களின் பங்குகள் முதன்மை சந்தைப் பட்டியலாகவுள்ளன. இதற்காக முதலீட்டாளர்கள் லாபத்தைப் பதிவு செய்துவிட்டு கையில் பணத்துடன் காத்திருக்க முடிவு செய்துள்ளனர் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 2,427 நிறுவனப் பங்குகள் சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,489 நிறுவனப் பங்குகளில் 2,427 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 935 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 127 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 392பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 23 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 314 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 19 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.271.42 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 8,32,94,337-ஆக உயர்ந்துள்ளது.
 புதிய உச்சத்தில் லாபப் பதிவு: சென்செக்ஸ் காலையில் 390.89 புள்ளிகள் கூடுதலுடன் 62,156.48-இல் தொடங்கி, அதிகபட்சமாக 62,245.43 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னர், லாபப் பதிவு காரணமாக 61,594.29 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 49.54 புள்ளிகளை (0.08 சதவீதம்) குறைந்து 61,716.05-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.
 டெக் மஹிந்திரா முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தர நிறுவனப் பங்குகளில் 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் சரிவைச் சந்தித்தன.முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா 4.12 சதவீதம், எல் அண்ட் டி 3.26 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபின்சர்வ், இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க், ரிலையன்ஸ் உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் உயர்ந்தன. மேலும், எச்டிஎஃப்சி, ஹெச்சிஎல் டெக், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சிறிதளவு உயர்ந்து ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.
 ஐடிசி கடும் சரிவு: அதேசமயம், நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி 6.23 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டைட்டன், டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக், பவர் கிரிட், இன்டஸ்இண்ட் பேங்க் ஆகியவை 2 முதல் 4 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், எஸ்பிஐ, ஏஷியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 நிஃப்டி 58 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 359 நிறுவனப் பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,480 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தர நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு காலையில் 18,602.35-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 18,604.45 வரை உயர்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னர், 18,377.70 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 58.30 புள்ளிகள் (0.32) குறைந்து 18,418.75-இல் நிலைபெற்றது.
 துறைவாரியாகப் பார்த்தால், ஐடி குறியீடு தவிர மற்ற அனைத்து முக்கிய துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 4.74 சதவீதம், பிஎஸ்யு பேங்க் 3.73 சதவீதம், எஃப்எம்சிஜி 3.19 சதவீதம், மெட்டல் 2.46 சதவீதம், கன்ஸ்யூமர் டியூரபல்ஸ் குறியீடு 2.44 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. மேலும், ஆட்டோ, ஹெல்த் கேர், பார்மா குறியீடுகளும் 1 முதல் 1.50 சதவீதம் வரை குறைந்து சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

Tags : Stock market
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT