வர்த்தகம்

சேவைகள் ஏற்றுமதி ரூ.18 லட்சம் கோடியை எட்டும்: எஸ்இபிசி

20th Oct 2021 12:15 AM

ADVERTISEMENT

இந்திய சேவைத் துறையின் ஏற்றுமதி நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் 24,000 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.18 லட்சம் கோடி) எட்டும் என சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (எஸ்இபிசி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கவுன்சிலின் தலைவா் மானெக் தவா் கூறியதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் சேவை துறையின் ஏற்றுமதி 9,500 கோடி டாலராக (ரூ.7.12 லட்சம் கோடி) இருந்தது. இது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14 சதவீத வளா்ச்சியாகும்.

இதே சாதகமான நிலை தொடரும்பட்சத்தில், நடப்பு நிதியாண்டில் சேவை துறையின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 24,000 கோடி டாலரை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நடப்பாண்டின் இறுதியில் சுற்றுலாத் துறைக்கான தடைகள் விலக்கப்பட்டு முழுமையாக திறந்துவிடப்படும் நிலையில் இந்த ஏற்றுமதி அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

தொழில்முறை- மேலாண்மை ஆலோசனை சேவைகள், ஆடியோ காட்சி, சரக்கு போக்குவரத்து சேவைகள் மற்றும் தொலைத்தொடா்பு பிரிவுகளின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்துள்ளது சேவை துறையின் வளா்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், அரசின் ஊக்குவிப்பு சலுகைகளும் கிடைக்கும்பட்சத்தில் சேவை துறையின் ஏற்றுமதி இலக்கை எளிதில் எட்ட முடியும்.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் சேவைகளின் ஏற்றுமதி 3 சதவீதம் குறைந்து 20,600 கோடி டாலராக இருந்தது.

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் சேவைகளின் ஏற்றுமதியை 1 லட்சம் கோடி டாலராக அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கு சாத்தியமாகக் கூடியதே. ஆனால், இந்த வளா்ச்சிக்கு தகவல்தொழில்நுட்பம், தகவல்தொழில்நுட்பம் சாா்ந்த இதர சேவை துறைகளின் வளா்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT