வர்த்தகம்

4 நாள் தொடர் சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 198 புள்ளிகள் அதிகரிப்பு

24th Nov 2021 03:07 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், குறைந்தபட்ச நிலையிலிருந்து ஓரளவு எழுச்சி பெற்று நேர்மறையாக முடிந்ததால், 4 நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 198 புள்ளிகள் முன்னேற்றம் அடைந்து 58,664-இல் நிலைபெற்றது. அதேபோல தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டியும் 87 புள்ளிகள் உயர்ந்து 17,500-ஐ கடந்து நிலைபெற்றது.
 தொடர்ந்து 4 நாள்களாக சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை காலையில் பலவீனமாகவே இருந்தது. அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரலின் தலைவராக ஜெரோம் பவல் மீண்டும் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அந்த நாட்டுச் சந்தைகள் கடும் பங்கு விற்பனையை எதிர்கொண்டன. மேலும், கச்சா எண்ணெய், எரிவாயு குறியீடுகளும் கடும் அழுத்தத்தில் இருந்தன. அவற்றின் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் காலையில் எதிரொலித்தது. பின்னர் உலோகம், பொதுத்துறை வங்கி, பார்மா, மின்துறை பங்குகள், நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு நல்ல ஆதரவு கிடைத்ததால் வர்த்தகம் சூடுபிடித்து இறுதியில் நேர்மறையாக முடிந்தது. இதன் மூலம், 4 நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 2,428 நிறுவனப் பங்குகள் ஏற்றம்: பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,415 நிறுவனப் பங்குகளில் 825 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியைச் சந்தித்தன. 2,428 பங்குகள் ஆதாயம் பெற்றன. 162 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 162 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 58பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 445 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 156 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.2.92 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக இறுதியில் ரூ.263.90 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 8,74,31,832-ஆக உயர்ந்துள்ளது.
 "காளை' பாய்ச்சல்: காலையில் சென்செக்ஸ் பலவீனத்துடன் 481.94 புள்ளிகள் குறைந்து 57,983.95-இல் தொடங்கி, 57,718.34 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 58,834.95 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 198.44 புள்ளிகள் (0.34 சதவீதம்) கூடுதலுடன் 58,664.33-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 747.55 புள்ளிகளை இழந்திருந்தது. அதன் பிறகு பங்குகளை வாங்குவதற்கு ஆதரவு கிடைத்தது. காளை முன்னேறியதால் சென்செக்ஸ் நேர்மறையாக முடிந்தது.
 21 பங்குகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் பவர் கிரிட் 3.91 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக என்டிபிசி, டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், சன் பார்மா, பஜாஜ் ஃபின்சர்வ், டெக் மஹிந்திரா, எஸ்பிஐ, எல் அண்ட் டி, கோட்டக் பேங்க், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ் உள்ளிட்டவை 1 முதல் 2.50 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், டிசிஎஸ் ஆகியவையும் ஆதாயப்பட்டியலில் வந்தன.
 இன்டஸ்இண்ட் பேங்க் சரிவு: அதே சமயம், தனியார் வங்கியான இன்டஸ்இண்ட் பேங்க் 2.59 சதவீதம், ஏஷியன் பெயிண்ட்ஸ் 2.35 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், இன்ஃபோஸிஸ், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுஸýகி, ஐசிஐசிஐ பேங்க், எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க் சிறிதளவு குறைந்து சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
 நிஃப்டி 87 புள்ளிகள் உயர்வு:
 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு காலையில் 17,281.75-இல் தொடங்கி 17,216.10 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 17,553.70 வரை உயர்ந்த நிஃப்டி இறுதியில் 86.80 புள்ளிகள் கூடுதலுடன் (0.50 சதவீதம்) 17,503.35-இல் நிலைபெற்றது.
 குறியீடுகள் முன்னேற்றம்:
 தேசியப் பங்குச் சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் ஏற்றம் பெற்றன. இதில் நிஃப்டி மெட்டல் குறியீடு 3.30 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், மீடியா, பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி, பார்மா, ஹெல்த்கேர் குறியீடுகளும் 1.75 சதவீதம் முதல் 2.40 சதவீதம் வரை உயர்ந்தன.
 ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிவு
 வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் குறைந்து 74.42-இல் நிலைபெற்றது.
 கச்சா எண்ணெய் பேரல் 78.93 டாலர்
 சர்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.97 சதவீதம் குறைந்து 78.93 அமெரிக்க டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.


 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT