வர்த்தகம்

சென்செக்ஸ் மேலும் 613 புள்ளிகள் ஏற்றம்: 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 50,000-ஐ கடந்தது

19th May 2021 03:27 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை ஏறுமுகத்தில் இருந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 613 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 50,000-ஐ கடந்து நிலைபெற்றது. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ. 2.74 லட்சம் கோடி உயர்ந்தது.
 பங்குச் சந்தையில் திங்கள்கிழமை இருந்த எழுச்சி செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது. உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்த நிலையில், உள்நாட்டில் கரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருவது சாதகமாக அமைந்தது. இதன் தாக்கம் விரைவான பொருளாதார மீட்சிக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதாக இருக்கும் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
 மேலும், ஆசிய சந்தைகளின் வலுவான குறிப்புகளும் எழுச்சிக்கு ஆதரவாக அமைந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், குறிப்பாக சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டுப் பட்டியலில் உள்ள வலுவான பங்குகளான எச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவை வெகுவாக உயர்ந்து சந்தையின் எழுச்சிக்கு "கை' கொடுத்தன.
 சந்தை மதிப்பு மேலும் ரூ.2.74 லட்சம் கோடி உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,254 பங்குகளில் 1,946 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,144 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 164 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன.312 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 22 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 434 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 165 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின.
 சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.2.74 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.216.39 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 6.84 கோடிக்கும் மேலாக உள்ளது.
 தொடர் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 405.95 புள்ளிகள் கூடுதலுடன் 49,986.68-இல் தொடங்கி 49,959.20 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 50,313.25 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 612.60 புள்ளிகள் (1.24 சதவீதம்) கூடுதலுடன் 50,193.33-இல் நிலைபெற்றது. இது கடந்த மார்ச் 16-ஆம் தேதிக்குப் பிறகு பதிவாகியுள்ள அதிகபட்சமாகும். தொடக்கத்திலிருந்து இறுதி வரையிலும் சந்தை தொடர்ந்து "காளை'யின் பிடியிலேயே இருந்ததால் எழுச்சி தொடர்ந்தது.
 25 பங்குகள் முன்னேற்றம்:
 சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 25 பங்குகள் ஆதாயம் பெற்றன. 5 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில் எம் அண்ட் எம் 5.91 சதவீதம், பஜாஜ் ஆட்டோ 5.17 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ் 4.90 சதவீதம் ஏற்றம் பெற்றது. எச்டிஎஃப்சி பேங்க், எல் அண்ட் டி, பவர் கிரிட், இன்டஸ்இண்ட் பேங்க், ஓஎன்ஜிசி, டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை 1.50 முதல் 2.60 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், மாருதி சுஸýகி ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
 பார்தி ஏர்டெல் சரிவு: அதேசமயம், பார்தி ஏர்டெல் 2.41 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஐடிசி, டாக்டர் ரெட்டீஸ், எஸ்பிஐ, ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
 15,000 புள்ளிகளைக் கடந்தது நிஃப்டி: தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 1,081 பங்குகள் ஆதாயம் பெற்றன. 656 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 184.95 புள்ளிகள் (1.24 சதவீதம்) உயர்ந்து 15,108.10-இல் நிலைபெற்றது. இது மார்ச் 10-ஆம் தேதிக்குப் பிறகு பதிவாகியுள்ள அதிகபட்சமாகும். காலையில் 15,067.20-இல் தொடங்கி 15,043.70 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 15,137.25 வரை உயர்ந்தது. 52 வார அதிகபட்ச நிலையை எட்டுவதற்கு இன்னும் 323.65 புள்ளிகள் உள்ளன.
 நிஃப்டி எஃப்எம்சிஜி, பார்மா, பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஏறுமுகம் கண்டது. இதில் ஆட்டோ குறியீடு 3.22 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது.
 மேலும், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், மீடியா, மெட்டல், ஐடி குறியீடுகள் 1முதல் 1.70 சதவீதம் வரை உயர்ந்தன. நிஃப்டி-50 குறியீட்டுப் பட்டியலில் 42 பங்குகள் ஆதாயம் பெற்றன. 8பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன.

ஆட்டோ பங்குகள் அபாரம்
 பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகளுக்கு அமோக வரவேற்பு காணப்பட்டது. இதனால், தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி ஆட்டோ குறியீட்டுப் பட்டியலில்
 இடம் பெற்றுள்ள 15 நிறுவனப் பங்குகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் இருந்தன. இதில் 2 முதல் 6.70 சதவீதம் வரை உயர்ந்த பங்குகள் விவரம் வருமாறு:

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT