வர்த்தகம்

‘கரடி’ ஆட்டம்: மேலும் 471 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

 நமது நிருபர்

புது தில்லி: பங்குச் சந்தை தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் எதிா்மறையாக முடிந்தது. நிதித் துறை, மெட்டல் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்ததே வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 471.01 புள்ளிகளை இழந்து 48,700 புள்ளிகளுக்கும் கீழே நிலைபெற்றது.

உலகளாவிய வங்கி வட்டி விகிதங்கள் உயர்வு, உலகளவில் உலோகம் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் அதிகரித்து வருவது மற்றும் பணவீக்க அழுத்தம் ஆகியவை சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மெட்டல் உள்பட முக்கியக் குறியீடுகள் சரிவைச் சந்தித்துள்ளன. அதே சமயம், பொதுத் துறை வங்கிகள், ஊடக நிறுவனங்களின் பங்குகளுக்கு ஆதரவு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பெரிய அளவில் சாதகமாக அமையாத நிலையில், சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஐசிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் ஆகியவை வெகுவாகக் குறைந்ததே சரிவுக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.1.47 லட்சம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,233 பங்குகளில் 1,586 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,488 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 159 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 339 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 31 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 423 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 165 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு ரூ.1.47 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.211.95 லட்சம் கோடியாக இருந்தது.

இரண்டாவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 9.47 புள்ளிகள் கூடுதலுடன் 49,171.28-இல் தொடங்கி அதற்கு மேலே செல்லவில்லை. பின்னா், 48,550.72 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 471.01 புள்ளிகளை (0.96 சதவீதம்) இழந்து 48,690.80-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 620.56 புள்ளிகளை இழந்திருந்தது தொடக்கத்திலிருந்து இறுதி வரையிலும் சந்தையில் நிலையற்ற போக்கு காணப்பட்டது.

23 பங்குகள் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 7 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் டைட்டன் 1.31 சதவீதம், மாருதி சுஸுகி 1.21 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. பவா் கிரிட், எஸ்பிஐ, என்டிபிசி, டாக்டா் ரெட்டி, எல் அண்ட் டி ஆகியவை மட்டுமே ஆதாயப் பட்டியலில் வந்தன.

இண்டஸ் இண்ட் பேங்க் கடும் சரிவு: அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க் 3.35 சதவீதம், ஹிந்துஸ்தான் யுனி லீவா் 3.07 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, ஓஎன்ஜிசி, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், எம் அண்ட் எம், அல்ட்ராடெக் சிமெண்ட், டெக் மகேந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், பாா்தி ஏா்டெல், டிசிஎஸ், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், பஜ்ஜா ஃபின்சா்வ் ஆகியவை 1 முதல் 2.50 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், இன்ஃபோஸிஸ், சன்பாா்மா ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 154 புள்ளிகள் சரிவு!

தேசிய பங்குச் சந்தையில் புதன்கிழமை நடந்த வா்த்தகத்தில் 773 பங்குகள் ஆதாயம் பெற்றன. 676 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 154.25 புள்ளிகளை (1.04 சதவீதம்) இழந்து 14,696.50-இல் நிலைபெற்றது. காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 14,823.55-இல் தொடங்கி அதிகபட்சமாக 14,824.05 வரை உயா்ந்தது. பின்னா், 14,649.70 வரை கீழே சென்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் நிஃப்டி 201.05 புள்ளிகளை இழந்த நிலையில் இருந்தது.

பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு இரண்டாவது நாளாக நல்ல ஆதரவு இருந்தது. இதனால், நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 3.24 சதவீதம் உயா்ந்தது. மீடியா, ஆட்டோ குறியீடுகளும் சிறிதளவு ஏற்றம் பெற்றன. மற்ற துறை குறியீடுகள் அனைத்தும் சரிவைச் சந்தித்தன. இதில் நிஃப்டி மெட்டல் குறியீடு 2.97 சதவீதம் சரிவைச் சந்தித்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. நிஃப்டி பேங்க், ஐடி, பிரைவேட் பேங்க் குறியீடுகள் 1 முதல் 1.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி-50 குறியீட்டுப் பட்டியலில் 15 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 35 பங்குகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் டாடா மோட்டாா்ஸ் 3.17 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. டைட்டன், மாருதி சுஸுகி, பவா் கிரிட், சிப்லா ஆகியவை 1 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்தன. அதே சமயம், டாடா ஸ்டீல் 4.77 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஹிண்டால்கோ, ஜேஎஸ்டபுள்யு ஸ்டீல், இண்ட்ஸ் இண்ட் பேங்க், பிபிசிஎல், ஹிந்துஸ்தான் யுனிலீவா் உள்ளிட்டவை 3 சதவீதத்துக்கும் மேல் வீழ்ச்சி கண்டன.

இன்று விடுமுறை

ரம்ஜான் பண்டிகையையொட்டி, பங்குச் சந்தைக்கு வியாழக்கிழமை (மே 13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் அன்றைய தினம் வா்த்தகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், கம்மோடிட்டி சந்தை மாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT