வர்த்தகம்

சென்செக்ஸ் 1,128 புள்ளிகள் ஏற்றம்: முதலீட்டாளர்களுக்கு ரூ.3.50 லட்சம் கோடி லாபம்

31st Mar 2021 04:08 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் எழுச்சி காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,128.08 புள்ளிகள் உயர்ந்து 50,000-ஐ கடந்து நிலைபெற்றது. அதேபோன்று தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 337.80 புள்ளிகள் உயர்ந்து 14,800-ஐ கடந்து நிலைத்தது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்தன. அமெரிக்காவில் 10 ஆண்டு கருவூல பத்திர ஆதாயம் அதிகரித்த போதும், இந்தியாவின் 10 ஆண்டு பத்திர ஆதாயம் மிகவும் நிலையானதாகவே உள்ளது. இந்த இரண்டு காரணிகளும் இந்திய பங்குச் சந்தைகளுக்கு ஆதரவாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. மேலும், வளர்ந்து வரும் சந்தைகளில் இந்திய பங்குச் சந்தைகள் சிறப்பாகச் செயல்படும் என்று கோட்டக் செக்யூரிட்டீஸின் நிர்வாகக் குழு துணைத் தலைவரும், அடிப்படை ஆராய்ச்சிப் பிரிவின் தலைவருமான ருஸ்மிக் ஓசா தெரிவித்துள்ளார்.
 மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாக உயர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி வலுப்பெற உதவியாக இருந்தன என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 சந்தை மதிப்பு ரூ.3.50 லட்சம் கோடி உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,162 பங்குகளில் 1,551 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,402 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 209 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 146 பங்குகள் வெகுவாக உயர்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 71 பங்குகள் வெகுவாகக் குறைந்து புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 249 பங்குகள் வெகுவாக ஏற்றம் பெற்று உயர்ந்தபட்ச உறைநிலையையும், 332 பங்குகள் வெகுவாகக் குறைந்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.50 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.204.77 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.3.50 லட்சம் கோடி லாபம் பெற்றுள்ளனர்.
 2-ஆவது நாளாக எழுச்சி: கடந்த வார இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை எழுச்சி பெற்றிருந்த பங்குச் சந்தை திங்கள்கிழமை ஹோலி விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமையும் ஏற்றம் பெற்றது. சென்செக்ஸ் காலையில் 323.18 புள்ளிகள் கூடுதலுடன் 49,331.68-இல் தொடங்கி அதற்கு கீழே செல்லவில்லை. பின்னர், அதிகபட்சமாக 50,268.45 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 1,128.08 புள்ளிகள் (2.30 சதவீதம்) கூடுதலுடன் 50,136.58-இல் நிலைபெற்றது. இதையடுத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச் சந்தை எழுச்சி பெற்றுள்ளது.
 27 பங்குகள் ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், பார்தி ஏர்டெல் ஆகிய மூன்று நிறுவனங்களின் பங்குகள் தவிர மற்ற 27 பங்குகளும் ஆதாயம் பெற்றன. இதில் எச்டிஎஃப்சி பேங்க் 4.11 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது.
 இதற்கு அடுத்ததாக ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், என்டிபிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்லே இந்தியா, பவர் கிரிட், எச்டிஎஃப்சி, டிசிஎஸ் ஆகியவை 3 முதல் 4 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், ஐடிசி, ரிலையன்ஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
 தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 931 பங்குகள் ஆதாயம் பெற்றன. 807 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 337.80 புள்ளிகள் (2.33 சதவீதம்) உயர்ந்து 14,845.10-இல் நிலைபெற்றது. 14,628.50-இல் தொடங்கி 14,617.60 வரை கீழே சென்ற நிஃப்டி பின்னர் 14,876.30 வரை உயர்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தர நிறுவனப் பங்குகளில் 46 பங்குகள் ஆதாயம் பெற்றன. 4 நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
 ரியால்ட்டி குறியீடு தவிர்த்த மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி ஐடி, மெட்டல், பார்மா குறியீடுகள் 2.70 முதல் 2.90 சதவீதம் வரை உயர்ந்தன. நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ் குறியீடுகளும் ஏற்ற பட்டியலில் வந்தன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT