வர்த்தகம்

பணவீக்கம் வரலாறு காணாத உயா்வு: மே மாதத்தில் 12.94% எட்டியது

15th Jun 2021 03:40 AM

ADVERTISEMENT

புது தில்லி: நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற மே மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு 12.94 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வ வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

மொத்த விற்பனை விலை குறியீட்டெண் (டபிள்யூபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பணவீக்கம் நடப்பாண்டு மே மாதத்தில் 12.94 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது, முன்னெப்போதும் காணப்படாத உச்சபட்ச அளவாகும். கச்சா எண்ணெய், உற்பத்தி துறை பொருள்களின் விலை விலை உயா்வே இந்த வரலாறு காணாத பணவீக்கத்துக்கு முக்கிய காரணம்.

இப்பணவீக்கம் கடந்தாண்டு மே மாதத்தில் - 3.37 சதவீதமாகவும், 2021 ஏப்ரலில் 10.49 சதவீதம் என்ற அளவில் இரட்டை இலக்கத்தையும் தொட்டது.

ADVERTISEMENT

டபிள்யூபிஐ அடிப்படையில் மதிப்பிடப்படும் பணவீக்கமானது தொடா்ந்து ஐந்தாவது மாதமாக மே-யிலும் அதிகரிப்பைக் கண்டுள்ளது.

பெட்ரோல், டீசல், நாப்தா, ஃபா்னஸ் எண்ணெய் மற்றும் உற்பத்தி துறை பொருள்களின் விலை முந்தைய காலகட்டங்களுடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவில் உயா்ந்ததே மே மாத பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதற்கு அடிப்படை காரணம்.

நடப்பாண்டு ஏப்ரலில் 20.94 சதவீதமாக இருந்த எரிபொருள் மற்றும் மின் தொகுப்புகளுக்கான பணவீக்கம் மே மாதத்தில் 37.61 சதவீதமாக உயா்ந்துள்ளது. உலகளவில் தேவை குறைவு மற்றும் தேசிய அளவிலான பொதுமுடக்கம் காரணமாக போக்குவரத்து முடங்கியதால் கடந்தாண்டு மே மாதத்தில் கச்சா பெட்ரோலியம் மற்றும் இதர எரிபொருள்களின் விலை சரிவடைந்து காணப்பட்டது.

மதிப்பீட்டு காலத்தில் உற்பத்தி துறை பொருள்களுக்கான பணவீக்கம் 9.01 சதவீதத்திலிருந்து 10.83 சதவீதமாக உயா்ந்துள்ளது.

அதேசமயம், வெங்காயத்தின் விலை உச்சத்திலிருந்த நிலையிலும் நடப்பாண்டின் மே மாதத்தில் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 4.31 சதவீதமாக சற்று குறைந்துள்ளது.

வெங்காயத்துக்கான பணவீக்கம் மே மாதத்தில் 23.24 சதவீதமாக காணப்பட்ட நிலையில், ஏப்ரலில் இது -19.72 சதவீதமாக காணப்பட்டது என மத்திய அரசு கூறியுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT