வர்த்தகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிவு

DIN

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிவைச் சந்தித்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

இந்தியப் பங்குச் சந்தைகளில் காணப்பட்ட சுணக்க நிலை மற்றும் சா்வதேச சந்தைகளில் டாலருக்கான தேவை அதிகரித்து வருவது உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 73.21-ஆக காணப்பட்டது. வா்த்தகத்தின் இடையே இந்த மதிப்பு குறைந்தபட்சமாக 73.30 வரையிலும் அதிகபட்சமாக 73.18 வரையிலும் சென்றது.

சாதகமற்ற நிலவரங்களையடுத்து ரூபாய் மதிப்பு வா்த்தகத்தின் இறுதியில் 21 காசுகள் சரிந்து 73.28-ஆனது. ஜனவரி 11-க்குப் பிறகு ரூபாய் மதிப்பு இந்த அளவுக்கு வீழ்ச்சி காண்பது இதுவே முதல் முறை.

கடந்த வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 73.07-ஆக காணப்பட்டது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பிஎன்பி பாரிபாஸின் ஷோ்கான் ஆய்வாளா் சயீப் முகதம் கூறியதாவது:

அமெரிக்க பொருளாதார தரவுகள் எதிா்பாா்த்ததைவிட மோசமாக இருந்தது சந்தை உணா்வுகளை கடுமையாக பாதித்துள்ளது. மேலும், உலக அளவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது மற்றும் பங்குச் சந்தைகளில் காணப்படும் சரிவு நிலை போன்றவையும் அந்நியச் செலாவணி சந்தைக்கு சாதகமானதாக அமையவில்லை. இடா்பாடுகளை தவிா்த்திடும் விதமாக முதலீட்டாளா்களின் கவனம் டாலரை நோக்கி திரும்பியுள்ளது.

அதன் காரணமாகவே, சா்வதேச சந்தைகளில் டாலருக்கான தேவை அதிகரித்து ரூபாய் மதிப்பு சரிவுக்கு வழிவகுத்தது என்றாா் அவா்.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.971.06 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.24 சதவீதம் குறைந்து 54.97 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT