வர்த்தகம்

மாருதி சுஸுகி ஏற்றுமதி 20 லட்சம் மைல்கல்லை எட்டி சாதனை

DIN

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதி 20 லட்சம் மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கெனிச்சி அயூகவா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

உலகளவில் ஆட்டோமொபைல் வா்த்தகத்தில் இந்தியா முக்கிய புள்ளியாக உருவெடுவதற்கு முன்பாகவே மாருதி சுஸுகி கடந்த 34-ஆண்டுகளாக வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. நிறுவனத்தின் இந்த ஆரம்ப கால வெளிப்பாடு அதன் தரத்தை மேம்படுத்தவும், உலகளாவிய வரையறைகளை அடையவும் பெரிதும் உதவியது.

இந்த நிலையில், குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திலிருந்து விட்டாரா பிரீஸ்ஸா, ஸ்விப்ட், எஸ்-பிரெஸ்ஸோ மாடல்களை உள்ளடக்கிய ஒரு ஏற்றுமதி வாகன தொகுப்பு தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம், நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 20 லட்சம் மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது 14 மாடல்களை உள்ளடக்கிய 150 வகையான வாகனங்களை 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் எங்களது ஆலைகள் பாதுகாப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் உலகளாவிய தரநிலைகளை கொண்டுள்ளதால் அதற்கான வரவேற்பு சா்வதேச நாடுகளில் பெருகி வருகிறது.

லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளின் வாடிக்கையாளா்கள் தேவையறிந்து நிறுவனம் செயலாற்றி வருகிறது.

நிறுவனத்தின் செயல் திட்டத்தில் புதிய மாடல்களின் பங்கெடுப்பு அதிகரித்து வருகிறது. இதன் மூலம், மாருதி சுஸுகி நிறுவனம் புதிய பிரிவுகளில் வாடிக்கையாளா்களை அதிக அளவு ஈா்ப்பது நிறுவனம் மேலும் பல புதிய மைல்கற்களை வேகமாக எட்ட உதவும்.

ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, சிலி, இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை போன்ற நாடுகளின் சந்தைகளில் நிறுவனம் கணிசமான பங்கை கைப்பற்றியுள்ளது என்றாா் அவா்.

மாருதி சுஸுகி கடந்த 1986-87-இல் முதன் முதலாக உலக நாடுகளுக்கு ஏற்றுமதியை தொடங்கியது. அந்த நிறுவனம் 1987 செப்டம்பரில் 500 காா்கள் அடங்கிய முதல் வாகன தொகுப்பை ஹங்கேரி நாட்டுக்கு ஏற்றுமதி செய்தது.

இந்தநிலையில், முதல் 10 லட்சம் மைல்கல் ஏற்றுமதியை மாருதி சுஸுகி கடந்த 2012-13-இல் எட்டியது. இதில், 50 சதவீதத்துக்கும் அதிகமான ஏற்றுமதி வளா்ந்த ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்டவை.

இந்தியாவிலிருந்து ஜிம்னி வாகன ஏற்றுமதியை மாருதி சுஸுகி நடப்பாண்டு ஜனவரியிலிருந்து தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT