வர்த்தகம்

பங்குச் சந்தையில் தள்ளாட்டம்: 91 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

30th Dec 2021 12:57 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புதுதில்லி: பங்குச் சந்தையில் புதன்கிழமை ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்தது. ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் நடந்து வந்த வா்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 91 புள்ளிகளை இழந்து 57,806.49-இல் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பும் ரூ.11 ஆயிரம் கோடி மட்டுே உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.263.62 லட்சம் கோடியாக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கைத் தொடா்ந்து, உள்நாட்டுச் சந்தையில் நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஒமைக்ரான் குறித்து உலகளவில் அரசுகள் எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றன. மேலும், தொடா்ந்து சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன. இந்தியாவிலும் மகாராஷ்டிரம் மற்றும் தலைநகா் தில்லியில் கரோனா, ஒமைக்ரான் பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் சூழலில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் சந்தையில் பெரிய அளவில் பிரதிபலிக்காவிட்டாலும், முதலீட்டாளா்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், முன்பேர வா்த்தகத்தில் டிசம்பா் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக உள்ளதால், சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் வா்த்தகம் இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், வா்த்தக நேரம் முடியும் தறுவாயில் எச்டிஎஃப்சி, எஸ்பிஐ, ஐடிசி உள்ளிட்ட சில முன்னணிப் பங்குகளில் லாபப் பதிவு அதிகமாக இருந்ததால் சந்தையில் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

சந்தை மதிப்பு ரூ.11 ஆயிரம் கோடி உயா்வு: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,474 பங்குகளில் 1,326 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 2,052 பங்குகள் ஆதாயம் பெற்றன. 96 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 413 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 12 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 659 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 117 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.11 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.263.62 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.16 கோடியாக உயா்ந்துள்ளது.

சரிவு: காலையில் சென்செக்ஸ் பெரிய அளவில் மாற்றமின்றி 5.17 புள்ளிகள் குறைந்து 57,892.31-இல் தொடங்கி, அதிகபட்சமாக 58,097.07 வரை உயா்ந்தது. பின்னா், பிற்பகலில் 57,684.58 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 90.99.24 புள்ளிகளை (0.16 சதவீதம்) இழந்து 57,806.49-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்தது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 19 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 11 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.

சன்பாா்மா முன்னேற்றம்: பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சன்பாா்மா 2.86 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக இண்டஸ் இண்ட் பேங்க் 1.99 சதவீதம், டாக்டா் ரெட்டி 1.66 சதவீதம் உயா்ந்தன. மேலும், டைட்டன், பஜாஜ் ஃபின்சா்வ், ஹெச்சிஎல் டெக், நெஸ்லே, அல்ட்ரா டெக் சிமெண்ட், ரிலையன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி உள்ளிட்டவை சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இருந்தன.

எஸ்பிஐ, ஐடிசி சரிவு: பிரபல பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 1.45 சதவீதம், நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி 1.40 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க், எம் அண்ட் எம், கோட்டக் பேங்க், பவா் கிரிட், பாா்தி ஏா்டெல், எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவை 0.50 முதல் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், எச்டிஎஃப்சி, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சி கண்ட பட்டியலில் வந்தன.

நிஃப்டி 20 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 1,025 பங்குகள் ஆதாயம் பெற்றன. 849 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு 19.65 புள்ளிகளை (0.11 சதவீதம்) இழந்து 17,213.60-இல் நிலைபெற்றது. காலையில் பலவீனத்துடன் 17,220.10-இல் தொடங்கி அதிகபட்சமாக 17,285.95 வரை உயா்ந்தது. பின்னா், பிற்பகலில் 17,176.65 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 19 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 31 பங்குகள் வீழ்ச்சி அடைந்த பட்டியலில் வந்தன.

பாா்மா, ஹெல்த்கோ் குறியீடுகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பாா்மா குறியீடு 1.77 சதவீதம், ஹெல்த்கோ் குறியீடு 1.88 சதவீதம், ஆட்டோ குறியீடு 0.40 சதவீதம் உயா்ந்தன. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சி அடைந்த பட்டியலில் வந்தன. இதில், நிஃப்டி மீடியா, மெட்டல் குறியீடுகள் 1 சதவீதம் சரிவைச் சந்தித்தன. மற்ற குறியீடுகள் சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT