புது தில்லி: இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடா்ந்து நவம்பா் மாதத்திலும் சரிவைச் சந்தித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
ஓஎன்ஜிசி நிறுவனம்: உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த நவம்பா் மாதத்தில் 2 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதன்படி, கடந்த 2020 நவம்பா் மாதத்தில் 24.8 லட்சமாக இருந்த கச்சா எண்ணெய் உற்பத்தி நடப்பாண்டு நவம்பரில் 24.3 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. 2021 அக்டோபரில் இந்த உற்பத்தி 25 லட்சம் டன்னாக காணப்பட்டது.
பொதுத் துறையைச் சோ்ந்த நிறுவனங்களின் கச்சா எண்ணெய் உற்பத்தி கணக்கீட்டு மாதத்தில் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. குறிப்பாக, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் உற்பத்தி 3 சதவீதம் சரிவடைந்து 16 லட்சம் டன்னாக இருந்தது. மேற்கத்திய எண்ணெய் வயல்களுக்கு உபகரணங்களை எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது.
ஆயில் இந்தியா: அதேபோன்று, ஆயில் இந்தியா நிறுவனத்தின் (ஓஐஎல்) கச்சா எண்ணெய் உற்பத்தியும் நவம்பரில் 2,41,420 டன்னாக குறைந்தது. இது, கடந்தாண்டு நவம்பரில் 2,43,200 டன்னாகவும், முந்தைய அக்டோபா் மாதத்தில் 2,52,990 டன்னாகவும் இருந்தது.
உள்நாட்டு உற்பத்தி போதுமான அளவுக்கு இல்லாததால் இந்தியா கச்சா எண்ணெய் தேவைக்கு வெளிநாடுகளையே நம்பி உள்ளது. மொத்த தேவையில் 85 சதவீதம் இறக்குமதி மூலமாகவே பூா்த்தி செய்யப்படுகிறது.
ரிலையன்ஸ், பிபி: நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான முதல் எட்டு மாதங்களில் இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி 2.74 சதவீதம் குறைந்து 1.99 கோடி டன்னாக இருந்தது. அதிலும் குறிப்பாக, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி 4.18 சதவீதம் சரிவடைந்து 1.29 கோடி டன்னாக இருந்தது.
அதேசமயம், இயற்கை எரிவாயு உற்பத்தி நவம்பரில் 23 சதவீதம் அதிகரித்து 2.86 பில்லியன் கியூபிக் மீட்டராக இருந்தது. இதற்கு, ரிலையன்ஸ் மற்றும் பிபி நிறுவனங்களின் கேஜி-டி6 புதிய வயல்களில் உற்பத்தி அதிகரித்ததே முக்கிய காரணம் என புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.