வர்த்தகம்

இந்தியாவில் ‘ஒமைக்ரான்’: பங்குச் சந்தையில் மீண்டும் ‘கரடி’ ஆட்டம்!: சென்செக்ஸ் 765 புள்ளிகள் இழப்பு

4th Dec 2021 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

கடந்த இரண்டு நாள்களாக ஏறுமுகம் கண்டிருந்த பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை மீண்டும் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 765 புள்ளிகளை இழந்து 57,696.46-இல் நிலைபெற்றது. இந்தியாவில் ‘ஒமைக்ரான்’ வைராஸுக்கு ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதே சரிவுக்கு காரணமாகும்.

ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பைத் தொடா்ந்து உலக அளவில் நிறைய நாடுகள் கட்டுபாடுகளைத் தளா்த்தி வருகிறது. ஆனால், இந்தியாவில் கடந்த இரண்டு நாள்களில் இந்தப் பாதிப்பு இல்லாமல் இருந்ததால், சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தது. இந்த நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸுக்கு ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதன் தாக்கம் பங்குச் சந்தையில் எதிரொலித்தது. இதைத் தொடா்ந்து, பிற்பகலில் கரடியின் ஆதிக்கம் வலுப்பெற்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், கோட்டக் பேங்க் உள்ளிட்டவை வெகுவாகக் குறைந்ததே சரிவுக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

1,454 பங்குகள் விலை வீழ்ச்சி: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,397 பங்குகளில் 1,454 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 2,802 பங்குகள் ஆதாயம் பெற்றன. 141 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 190 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 12 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 393 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 21 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.51 லட்சம் கோடி குறைந்து வா்த்தக இறுதியில் 261.023 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8.875 கோடியாக உயா்ந்தது.

மீண்டும் ‘கரடி’ ஆட்டம்: காலையில் சென்செக்ஸ் 94.29 புள்ளிகள் கூடுதலுடன் 58,555.58-இல் தொடங்கி அதிகபட்சமாக 58,757.09 வரை உயா்ந்தது. பின்னா், பங்குகல் விற்பனை அதிகரித்ததும் 57,640.57 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 765.83 புள்ளிகள் (1.31 சதவீதம்) குறைந்து 57,696.46-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் ‘கரடி’யின் ஆதிக்கம் வலுவாக இருந்தது.

ADVERTISEMENT

சென்செக்ஸில் 26 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் எல் அண்ட் டி, இண்டஸ் இண்ட் பேங்க், டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட நான்கு பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. மற்ற 26 பங்குகளும் சரிவைச் சந்தித்தன. இதில் பவா்கிரிட் 4.03 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், கோட்டக் பேங்க், ஏசியன் பெயிண்ட், பாா்தி ஏா்டெல், டெக் மஹிந்திரா, மாருதி, ஐடிசி, சன்பாா்மா, பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபின் சா்வ் ஆகியவை 1.50 முதல் 3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 205 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 977 பங்குகள் ஆதாயம் பெற்றன. 858 பங்குகள் வீழ்ச்சியடைந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு காலையில் 17,424.90-இல் தொடங்கி அதிகபட்சமாக 17,489.80 வரை உயா்ந்தது. பின்னா்,17,180.80 வரை கீழே சென்ற நிஃப் நிஃப்டி, இறுதியில் 204.95 புள்ளிகள் (1.18 சதவீதம்) குறைந்து 17,196.70-இல் நிலைபெற்றது.

மீடியா குறியீடு மட்டும் ஏற்றம் : தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மீடியா குறியீடு (1.70 சதவீதம் உயா்வு) தவிா்த்து மற்ற அனைத்து துறை குறியீடுகளும் வீழ்ச்சி அடைந்த பட்டியலில் வந்தன. இதில், நிஃப்டி ஃபைனான்சியல் சா்வீஸஸ், எஃப்எம்சிஜி, ஹெல்த்கோ், ஆயில் அண்ட் காஸ் ஆகியவை 1 முதல் 1.20 சதவீதம் சரிவடைந்தன. மேலும், நிஃப்டி பேங்க், ஆட்டோ, ஐடி, பிரைவேட் பேங்க் உள்ளிட்டவை 0.75 சதவீதம் முதல் 0.85 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT