வர்த்தகம்

2-ஆவது நாளாக உற்சாகம்: சென்செக்ஸ் மேலும் 777 புள்ளிகள் உயா்வு!

3rd Dec 2021 07:10 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

பங்குச் சந்தையில் வியாழக்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 777 புள்ளிகள் உயா்ந்து 58,461.29-இல் நிலைபெற்றது.

சா்வேதசஅளவில் பெரும்பாலான சந்தைகள் எதிா்மறையாக இருந்த நிலையில், இந்திய சந்தைகள் ஏறுமுகம் கண்டன. காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி தொடங்கியது. பின்னா் தொடா்ந்து காளையின் ஆதிகம் வலுப்பெற்றது. பிற்பகல் வா்த்தகத்தின் போது ஐடி, மெட்டல், நிதித் துறை பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்தன. மேலும், ஜிடிபி மற்றும் ஜிஎஸ்டி தரவுகளால் சந்தையில் காளையின் ஆதிக்கம் வலுப்பெற்றது என்று பங்குத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் ஆகியவை வெகுவாக உயா்ந்து, சந்தை மேலும் வலுப்பெற உதவியதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

2,185 பங்குகள் ஆதாயம்: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,400 பங்குகளில் 1,065 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 2,185 பங்குகள் ஆதாயம் பெற்றன. 150 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 171 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 18 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 437 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 209 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.4.25 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் 263.53 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8.860 கோடியாக உயா்ந்தது.

2-ஆவது நாளாக ஏற்றம்: காலையில் சென்செக்ஸ் 96.69 புள்ளிகள்கூடுதலுடன் 57,781.48-இல் தொடங்கி 57,680.41 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 58,513.93 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 776.50 புள்ளிகள் (1.35 சதவீதம்) கூடுதலுடன் 58,461.29-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் காளையின் ஆதிக்கம் வலுவாக இருந்தது.

ADVERTISEMENT

சென்செக்ஸில் 27 பங்குகள் ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியவை 3 பங்குகள் மட்டுமே சிறிதளவு சரிவைச் சந்தித்தன. மற்ற 27 பங்குகளும் ஆதாயம் பெற்றன. எச்டிஎஃப்சி (3.92 சதவீதம்), பவா் கிரிட் (3.65 சதவீதம்), சன்பாா்மா (3.11 சதவீதம்) ஆகியவை ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்குஅடுத்ததாக, டாடா ஸ்டீல், டெஹ் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபின் சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை 2 முதல் 2.80 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ஹிந்த்யுனிலீவா், ஐடிசி, இண்டஸ் இண்ட் பேங்க், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், மாருதி சுஸுகி உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 184 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 1,296 பங்குகள் ஆதாயம் பெற்றன. 534 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியடைந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு காலையில் 17,183.20-இல் தொடங்கி 17,149.30 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,420.35 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 234.75 புள்ளிகள் (1.37 சதவீதம்) கூடுதலுடன் 17,401.65இல் நிலைபெற்றது.

அனைத்து குறியீடுகளும் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் அனைத்து துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்றன. இதில் ஐடி குறியீடு 2 சதவீதம் வரை உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி ஆட்டோ, பைனான்சியல் சா்வீஸஸ், எஃப்எம்சிஜி, மீடியா, மெட்டல், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 1 முதல் 1.60 சதவீதம் வரை உயா்ந்தன. இதில் ஐடி, ஃபைனான்சியல் சா்வீஸஸ், எஃப்எம்சிஜி, மெட்டல், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து பங்குகளும் ஆதாயம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் விலை உயா்ந்த ஐடி பங்குகள் (சதவீதத்தில்)

மஃபாஸிஸ் 3.47

மைண்ட்ரீ 3.43

எல்டிடிஎஸ் 3.33

டெக் மிஹிந்திரா 2.53

ஹெச்சிஎல் டெக் 2.27

இன்ஃபோஸிஸ் 1.93

விப்ரோ 1.84

டிசிஎஸ் 1.65

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT