வர்த்தகம்

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 196 புள்ளிகள் வீழ்ச்சி

1st Dec 2021 03:56 AM | நமது நிருபர்

ADVERTISEMENT

 

புது தில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.

விலை உயர்ந்த நிலையில் லாபப் பதிவும், விலை குறைந்த நிலையில் பங்குகளை வாங்குவதற்கு ஆதரவும் இருந்ததால் சந்தையின் போக்கை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இறுதியில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 196 புள்ளிகளை இழந்து 57,064-இல் நிலைபெற்றது.
உருமாறிய கரோனாவின் தாக்கத்தால் கடந்த வாரம் முதல் உலகளாவிய சந்தைகளில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய சந்தைகளில் வர்த்தகம் எதிர்மறையாக தொடங்கியது. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. காலையில் வெகுவாக உயர்ந்த சந்தை, பிற்பகலில் பங்குகள் விற்பனை அதிகரித்ததால் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
1,471 நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி: பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,402 நிறுவனப் பங்குகளில் 1,471 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,778 பங்குகள் ஆதாயம் பெற்றன. 153 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 158 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 33 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 284 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 277 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.23 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக இறுதியில் ரூ.257.17 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 8.836 கோடியாக உயர்ந்தது.
ஏற்ற, இறக்கம் அதிகரிப்பு: காலையில் சென்செக்ஸ் 11.50 புள்ளிகள்கூடுதலுடன் 57,272.08-இல் தொடங்கி அதிகபட்சமாக 58,183.77 வரை உயர்ந்தது. பின்னர், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 56,867,51 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 195.71 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைந்து 57,064.87-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.
சென்செக்ஸில் 17 நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தர நிறுவனப் பங்குகளில் 17 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 13 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் பவர் கிரிட் 3.43 சதவீதம், டைட்டன் 2.18 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்லே, பஜாஜ் ஃபைனான்ஸ்,, இன்ஃபோசிஸ், ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ், என்டிபிசி, ஹெச்சிஎல் டெக் ஆகியவை 0.50 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன.
டாடா ஸ்டீல் கடும் சரிவு: அதேசமயம், பிரபல உருக்கு உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 3.87 சதவீதம், கோட்டக் பேங்க் 2.87 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன.
இவற்றுக்கு அடுத்ததாக, பஜாஜ் ஆட்டோ, எம் அண்ட் எம், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், இன்டஸ்இண்ட் பேங்க், மாருதி சுஸூகி ஆகியவை 1 முதல் 1.70 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. எஸ்பிஐ, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி 71 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 1,041 பங்குகள் ஆதாயம் பெற்றன. 791 பங்குகள் வீழ்ச்சியடைந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு காலையில் 17,051.15-இல் தொடங்கி அதிகபட்சமாக 17,324.65 வரை உயர்ந்தது. பின்னர் 16,931.40 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 70.75 புள்ளிகள் (0.41 சதவீதம்) சரிந்து 16,983.20-இல் நிலைபெற்றது.
மெட்டல் குறியீடு சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மெட்டல் குறியீடு 1.94 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க் குறியீடு, ஃபைனான்சியல் சர்வீஸஸ், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க், ஆட்டோ குறியீடுகள் 0.50 முதல் 0.95 சதவீதம் வீழ்ச்சியடைந்தன. அதேசமயம் நிஃப்டி கன்ஸ்யூமர் டியூரபல்ஸ் குறியீடு 2.22 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஐடி, ரியால்ட்டி குறியீடுகள் 0.60 சதவீதம் வரை உயர்ந்தன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT