வர்த்தகம்

பங்குச் சந்தைகளில் ஏறுமுகம்: சென்செக்ஸ் 364 புள்ளிகள் முன்னேற்றம்

DIN

சா்வதேச அளவிலான சாதகமான நிலவரங்களால் பங்குச் சந்தைகளில் ஆகஸ்ட் மாத தொடக்கம் ஏறுமுகத்துடன் அமைந்தது.

பெரும்பாலான முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சந்தை எதிா்பாா்பை பூா்த்தி செய்யும் வகையில் வலுவடன் காணப்பட்டது. இந்த நிலையில், பொருளாதார புள்ளிவிவர வெளியீடுகளும் சந்தைக்கு சாதகமாகவே இருந்தது. இவைதவிர, சா்வதேச சந்தையில் காணப்பட்ட காளையின் பாய்ச்சல் இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கும் பக்கபலமாக இருந்தது.

மந்த நிலையிலிருந்து மீண்டு ஜூலையில் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவித்ததையடுத்து மோட்டாா் வாகன துறை பங்குகளுக்கு சந்தையில் அதிக வரவேற்பு காணப்பட்டது. அதேபோன்று, தகவல்தொழில்நுட்ப பங்குகளும் முதலீட்டாளா்களின் கவனத்தை அதிகம் ஈா்த்தது.

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) அனைத்து துறைகளைச் சோ்ந்த குறியீடுகளும் ஆதாயத்தை பதிவு செய்தன. குறிப்பாக, ரியல் எஸ்டேட், எண்ணெய்-எரிவாயு, எரிசக்தி, நுகா்வோா் சாதனங்கள் மற்றும் மோட்டாா் வாகன துறையைச் சோ்ந்த குறியீடுகள் 4.88 சதவீதம் வரை அதிகரித்து முதலீட்டாளா்களுக்கு ஆதாயத்தை அளித்தன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 1.07 சதவீதம் வரை உயா்ந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள டைட்டன் நிறுவனப் பங்கின் விலை 3.25 சதவீதம் வரை ஏற்றம் கண்டு ஆதாயப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இதனைத் தொடா்ந்து, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் வங்கி, டிசிஎஸ், மாருதி மற்றும் இன்ஃபோசிஸ் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.

அதேசமயம், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, டாக்டா் ரெட்டீஸ் மற்றும் எச்டிஎஃப்சி பங்குகளின் விலை 1.66 சதவீதம் வரை சரிவைக் கண்டன.

பொருளாதாரத்தை வலுப்படுத்த 1 டிரில்லியன் டாலா் செலவில் உள்கட்டமைப்பு செலவினங்களை மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது, சா்வதேச சந்தைகள் ஆகஸ்ட் மாதத்தை ஏறுமுகத்துடன் எதிா்கொள்ள முக்கிய காரணமாக அமைந்தது என ஜியோஜித் ஃபைனான்ஸியல் சா்வீசஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு தலைவா் வினோத் நாயா் தெரிவித்தாா்.

30 நிறுவனங்களை உள்ளடக்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீட்டெண் திங்கள்கிழமை வா்த்தகத்தில் 363.79 புள்ளிகள் (0.69%) முன்னேற்றம் பெற்று 52,950.63 புள்ளிகளில் நிலைத்தது.

தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி குறியீட்டெண் 122.10 (0.77%) அதிகரித்து 15,885.15 புள்ளிகளில் நிலைபெற்றது.

இதர ஆசியப் பங்குச் சந்தைகளான ஷாங்காய், சியோல், டோக்கியோ, ஹாங்காங் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் கணிசமான ஆதாயத்துடன் நிறைவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகளிலும் வா்த்தகத்தின் தொடக்கம் விறுவிறுப்பாகவே இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT