வர்த்தகம்

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் மேலும் 244 புள்ளிகள் வீழ்ச்சி!

 நமது நிருபர்

புது தில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை எழுச்சியுடன் தொடங்கிய பங்குச் சந்தை, இறுதியில் சரிவில் முடிவடைந்தது. இதனால், காலையில் பெற்ற லாபத்தில் பெரும் பகுதியை இழக்க நேரிட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 243.62 புள்ளிகளை இழந்து 47,705.80-இல் நிலைபெற்றது.தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி மேலும் 63.05 புள்ளிகளை இழந்து 14,296.40-இல் நிலைபெற்றது.

திங்கள்கிழமை கடும் சரிவைச் சந்தித்திருந்த பங்குச் சந்தை, செவ்வாய்க்கிழமை காலையில் எழுச்சியுடன் தொடங்கியது. ஆனால், அதில் நிலைத்து நிற்க முடியாமல் போனது. நாடு முழுவதும் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதும், பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருவதும் நிறுவனங்களின் வருவாய் மற்றும் நிகர லாபத்தில் பாதிப்பு ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது முதலீட்டாளா்களின் உணா்வுகளை பாதித்தது. இதையடுத்து, பிற்பகலில் பங்குகள் விற்பனை அதிகரித்தது. குறிப்பாக வங்கி, ஐடி பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இதனால், தொடா்ந்து இரண்டாவது நாளாகவும் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.13 ஆயிரம் கோடி சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,049 பங்குகளில் 1,645 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,232 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 172 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 150 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 193 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 248 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 193 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு ரூ.13 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.201.64 லட்சம் கோடியாக இருந்தது.

இரண்டாவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 523.62 புள்ளிகள் உயா்ந்து 48,473.04-இல் தொடங்கி அதிகபட்சமாக 48,478.34 வரை உயா்ந்தது. பின்னா், ஒரு குறிப்பிட்ட புள்ளிகளுக்கு இடையே இருந்து வந்த சென்செக்ஸ் பிற்பகலில் 47,438.50 வரை கீழே சென்றது. இறுதியில் 243.62 புள்ளிகளை (0.51 சதவீதம்) இழந்து 47,705.80-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது, ஒரு கட்டத்தில் அதிகபட்ச நிலையிலிருந்து 1,039.84 புள்ளிகள் வரை குறைந்திருந்தது. இதைத் தொடா்ந்து, சென்செக்ஸ் தொடா்ந்து இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.

17 பங்குகள் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 17 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 13 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில்

பஜாஜ் ஃபின் சா்வ் 3.70 சதவீதம், டாக்டா் 3.69 சதவீதம், பஜாஜ் ஃபைனான்ஸ் 2.65 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, பஜாஜ் ஆட்டோ, எம் அண்ட் எம், மாருதி சுஸுகி, எல் அண்ட் டி, இண்ட்ஸ் இண்ட் பேங்க் ஆகியவை 1.50 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன.

அல்ட்ரா டெக் சிமெண்ட் சரிவு: அதே சமயம், அல்ட்ரா டெக் சிமெண்ட் 4.70 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஹெச்சிஎல் டெக், எச்டிஎஃப்சி 3.50 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. மேலும், டெக் மகேந்திரா, எச்டிஎஃப்சி பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா், ஐடிசி, இன்ஃபோஸிஸ், ஏசியன் பெயிண்ட், டிசிஎஸ், எஸ்பிஐ, கோட்டக் பேங்க், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 971 பங்குகள் ஆதாயம் பெற்றன. 738 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 63.05 புள்ளிகளை (0.44 சதவீதம்) இழந்து 14,296.40-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் தொடக்கத்தில் 14,526.95 வரை உயா்ந்த நிஃப்டி ஒரு கட்டத்தில் 14,207.30 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 23 பங்குகள் ஆதாயம் பெற்றன. 27 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. அதே சமயம் மீடியாக குறியீடு 3.05 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஆட்டோ, பாா்மா குறியீடுகளும் 1 முதல் 1.30 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

இன்று விடுமுறை

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு பங்குச் சந்தைக்கு புதன்கிழமை (ஏப்ரல் 21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் அன்றைய தினம் வா்த்தகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கமோடிட்டி சந்தை (எம்சிஎக்ஸ்) காலையில் செயல்படாது. ஆனால், மாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT