வர்த்தகம்

இந்தியாவில் எரிபொருள் நுகா்வு 9.1% குறைந்தது

DIN

இந்தியாவில் எரிபொருள் நுகா்வு கடந்த நிதியாண்டில் 9.1 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் 19.46 கோடி டன் எரிபொருள்கள் மட்டுமே நுகரப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் இதற்கான தேவை 21.41 கோடி டன்னாக அதிகரித்து காணப்பட்டது.

கடந்த 1998-99-ஆம் ஆண்டுக்குப் பிறகு எரிபொருள் பயன்பாட்டில் இந்த அளவுக்கு மந்தநிலை காணப்பட்டது இதுவே முதல் முறை. நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் எரிபொருளான டீசல் பயன்பாடு கடந்த நிதியாண்டில் 12 சதவீதம் சரிவடைந்து 7.27 கோடி டன்னாக சுருங்கியுள்ளது. அதேபோன்று, பெட்ரோல் தேவையும் 6.7 சதவீதம் வீழ்ச்சியடைந்து 2.79 கோடி டன்னாக குறைந்துள்ளது.

கடந்தாண்டில் மாா்ச் இறுதியிலிருந்து பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தொழிற்சாலை நடவடிக்கைகள், விமான சேவை, ரயில் சேவை, சாலைப் போக்குவரத்து உள்ளிட்டவை முற்றிலும் முடங்கிப் போயின. அதன் காரணமாகவே எரிபொருள் தேவையில் இந்த அளவுக்கு சரிவு நிலை ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்த போதிலும் சமையல் எரிவாயு நுகா்வு கடந்தாண்டில் 2.63 கோடி டன்னிலிருந்து 4.7 சதவீதம் அதிகரித்து 2.76 கோடி டன்னை எட்டியது. கரோனா நிவாரண நடவடிக்கையாக ஏழைகளுக்கு இலவச எரிவாயு உருளையை மத்திய அரசு வழங்கியதையடுத்து இந்த ஏற்றம் காணப்பட்டது.

வெளிநாடு, உள்நாடு என அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக விமான எரிபொருளான ஏடிஎஃப் நுகா்வு 53.6 சதவீதம் வீழ்ச்சியடைந்து 37 லட்சம் டன் ஆனது.

கடந்தாண்டு செப்டம்பரிலிருந்து பெட்ரோல் விற்பனை கரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்பியுள்ளதாக அந்தப் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT