வர்த்தகம்

பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் 42 புள்ளிகள் முன்னேற்றம்

7th Apr 2021 04:36 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், தொடக்கத்தில் இருந்த லாபம் பிற்பகலில் பெருமளவு குறைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், நிஃப்டி சிறிதளவு முன்னேற்றத்துடன் முடிந்தது. சென்செக்ஸ் 42.07 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 45.70 புள்ளிகளும் உயர்ந்தன.
 நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால், லாபத்தை பதிவு செய்வதில் முதலீட்டாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். மேலும், கரோனா கட்டுப்பாடுகள் முதலீட்டாளர்களின் உணர்வுகளைப் பாதித்து வருகிறது. கரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படும் வரை உள்நாட்டு சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன்தான் காணப்படும் என பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு ரூ.1.26 லட்சம் கோடி உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,071 பங்குகளில் 1,664 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,217 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 190 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூல தன மதிப்பு ரூ.1.26 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.206.36 லட்சம் கோடியாக இருந்தது.
 ஏற்றம், இறக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் காலையில் 281.81 புள்ளிகள் கூடுதலுடன் 49,441.13-இல் தொடங்கி 49,582.26 வரை உயர்ந்தது. பின்னர் 48,936.35 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 42.07 புள்ளிகள் கூடுதலுடன் 49,201.39-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் அதிகபட்ச நிலையிலிருந்து 645.91 புள்ளிகளை இழந்திருந்தது. தொடக்கம் முதல் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டதால் சந்தையின் போக்கை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
 ஏசியன் பெயிண்ட்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 16 பங்குகள் ஆதாயம் பெற்றன. 14 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் ஏசியன் பெயிண்ட்ஸ் 4.07 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக சன் பார்மா, ஹிந்துஸ்தான் யுனி லீவர், எச்டிஎஃப்சி, டாக்டர் ரெட்டீஸ் லேப், நெஸ்லே இந்தியா ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், எம் அண்ட் எம், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், கோட்டக் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
 பவர் கிரிட் சரிவு: அதேசமயம், பவர் கிரிட் 2.29 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஆக்ஸிஸ் பேங்க், இன்டஸ்இண்ட் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, டெக் மஹிந்திரா, டைட்டன், எச்டிஎஃப்சி பேங்க், ஹெச்சிஎல் டெக், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ் உள்ளிட்டவை சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
 தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,041 பங்குகள் ஆதாயம் பெற்றன. 684 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 45.70 புள்ளிகள் (0.31 சதவீதம்) உயர்ந்து 14,683.50-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் 14,779.10 வரை உயர்ந்த நிஃப்டி, பின்னர் ஒரு கட்டத்தில் 14,573.90 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 31 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 18 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. நிஃப்டி மெட்டல், பார்மா, ரியால்ட்டி, எஃப்எம்சிஜி குறியீடுகள் 1 முதல் 1.80 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. ஆனால், பேங்க் குறியீடு சரிவைக் கண்டது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT