வர்த்தகம்

கரோனா காலத்திலும் உயர்த்தப்பட்ட மூலப்பொருள்களின் விலை: தவிக்கும் பம்ப்செட் தொழிலுக்குத் தேவை அரசின் மூலப்பொருள் வங்கி

30th Sep 2020 03:34 AM

ADVERTISEMENT

கரோனா நெருக்கடிக்கு இடையில் கடந்த சில வாரங்களாக செயல்படத் தொடங்கியுள்ள மோட்டார் பம்ப்செட் உற்பத்தி நிறுவனங்கள், திடீரென மூலப்பொருள்களின் விலை உயர்த்தப்பட்டதால் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றன. இதுபோன்ற விலை உயர்வுகளைத் தவிர்க்க கோவையில் அரசு சார்பில் மூலப்பொருள் வங்கி ஏற்படுத்த வேண்டும் என்று பம்ப்செட் உற்பத்தியாளர்கள் மீண்டும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
 விவசாயம், தொழிற்சாலை, வீட்டு உபயோக மோட்டார் பம்ப்செட் உற்பத்தியில் ஆமதாபாத், கான்பூர், கோவை ஆகியவை நாட்டிலேயே முன்னணியில் இருக்கும் நகரங்களாக உள்ளன. அரை ஹெச்.பி. முதல் 10 ஹெச்.பி. வரையிலான மோட்டார்களைத் தயாரிக்கும் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் கோவையில் 3 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. கோவையில் பாப்பநாயக்கன்பாளையம், கணபதி, பீளமேடு, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான பம்ப்செட் குறு, சிறு தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களில் நாளொன்றுக்கு 50 பம்ப்செட்கள் வரை தயாரிக்கப்படுகின்றன.
 இதைத் தவிர நாளொன்றுக்கு 100 மோட்டார் பம்ப்செட்டுகளும் அதற்கும் மேலும் தயாரிக்கும் திறன் கொண்ட நடுத்தர, பெரிய நிறுவனங்கள் 100க்கும் மேல் உள்ளன. பம்ப்செட் தொழில் நிறுவனங்கள் அண்மைக் காலமாக மின்தட்டுப்பாடு, ஆள்கள் பற்றாக்குறை, ஜிஎஸ்டி போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்துள்ளன. தற்போது கரோனா பாதிப்பு இந்தத் தொழிலை மேலும் பாதித்துள்ளது.
 நீண்ட விடுமுறைக்குப் பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பகுதியளவிலான பம்ப்செட் தொழிற்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் 25 சதவீத தொழிலாளர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் நடுத்தர நிறுவனங்களில் வாரம் 2 நாள்கள் கட்டாய விடுமுறை அளிக்கப்படுகிறது. குறு, சிறு நிறுவனங்களிலோ அதிகபட்சம் 4 நாள்களுக்குத்தான் வேலை நடைபெறுகிறது.
 இதுபோன்ற நெருக்கடிகளுக்கு இடையில் மேலும் ஒரு நெருக்கடியாக வந்துள்ளது மூலப்பொருள்களின் விலை உயர்வு. இது இந்தத் தொழிலை அவ்வப்போது பாதிக்கும் ஒரு விஷயமாக இருந்தாலும், கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு, இந்தத் தொழிலுக்கு வாழ்வா, சாவா என்ற நிலையை ஏற்படுத்தியிருப்பதாக உற்பத்தியாளர்கள் கருதுகின்றனர்.
 மோட்டார் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருள்களில் காப்பரும் ஒன்றாகும். மேலும் பம்புகளின் சில உதிரிபாகங்களில் காப்பர் பயன்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் கடந்த ஜூன் 1 ஆம் தேதியுடன் ஒப்பிடும்போது தற்போது காப்பர் விலை சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒயர்களின் விலை இரண்டு, மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது என்கிறார் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சீமா) தலைவர் வா.கிருஷ்ணகுமார்.
 அதேபோல அலுமினியத்தின் விலை 15 சதவீதமும், லேமினேஷன் ஸ்டீல், காஸ்டிங்குகளின் விலை சுமார் 10 சதவீதமும் அதிகரித்துள்ளன. பம்ப் தொழிலுக்கு வார்ப்புகளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் தேனிரும்பு விலையும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
 ஏற்கெனவே பம்ப்செட் உற்பத்தி நிறுவனங்கள் ஒட்டுமொத்த மந்தநிலையின் காரணமாக கடுமையான பண நெருக்கடியை எதிர்கொள்கின்றன. இந்நிலையில், தற்போது மூலப்பொருள்களின் விலை உயர்வும் உற்பத்திச் செலவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் பம்ப்செட் மோட்டார்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிறது.
 நெருக்கடியில் இருக்கும் தொழில்களுக்கு இதுபோன்ற இடையூறுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது வெளிநாடுகளுக்கு அதிக ஏற்றுமதியின் காரணமாக மெட்டல்களின் விலை உயர்வு இருப்பதாகக் கூறப்படுகிறது. வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உள்நாட்டில் உயரும்போது அதன் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்படுவதைப்போல, பம்புகளின் மூலப்பொருள் விலை உயர்வைத் தடுக்கவும் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கலாம். அத்துடன் மூலப்பொருள்கள் தடையின்றி கிடைக்க அரசே கூட்டுறவு அமைப்புகளைப்போல நிறுவனங்களை உருவாக்கலாம் என்றார்.
 நாட்டில் மோட்டார் பம்ப் தயாரிப்புக்கான மூலப்பொருள் விற்பனை அனைத்தும் தனியார் பெருவியாபாரிகளின் கைகளிலேயே உள்ளன. ஒரு சில வியாபாரிகள் கைகளில் மொத்த சந்தையும் இருப்பதால் அவர்கள் தங்களுக்குள் கூட்டு வைத்துக் கொண்டு மூலப்பொருள்களின் விலையை உயர்த்துகின்றனர். இதைக் கட்டுப்படுத்த அரசே மூலப்பொருள் வங்கியைத் தொடங்க வேண்டும் என்கிறார் கோவை பம்ப்செட், உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் (கோப்மா) தலைவர் கே.மணிராஜ்.
 பம்ப்செட் உற்பத்தித் தொழில் விவசாயத்துடன் நெருங்கியத் தொடர்புடையது. எனவே வேளாண் உற்பத்திக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் இதற்குக் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களைப்போல மூலப்பொருள் வங்கிகளை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும். இதன் மூலம் மூலப்பொருள்களின் விலை உயர்வை ஓரளவுக்குத் தடுக்க முடிவதுடன், ஏராளமானோருக்கு புதிதாக வேலைவாய்ப்பும் கிடைக்கும், பம்ப்செட் தொழிலையும் காப்பாற்ற முடியும்.
 பல ஆண்டுகளாக மூடப்படும் நிலையிலேயே இருக்கும் இந்தத் தொழிலை, ஜிஎஸ்டி, மூலப்பொருள் விலை உயர்வு போன்றவை விரைவுபடுத்துகின்றன. பெரிய நிறுவனங்களைப் பொருத்தவரை மூலப்பொருள் விலையை அதன் உற்பத்திப் பொருளில் சேர்க்கின்றனர். ஆனால் குறு, சிறு உற்பத்தியாளர்களுக்கோ சந்தையில் இடத்தை உறுதி செய்து கொள்வதற்காக இதுபோன்ற விலை உயர்வுகளைத் தங்களின் லாபத்தில் இருந்தே வழங்க வேண்டியிருக்கிறது.
 இதனால் இந்தத் தொழிலில் லாபம் இல்லை என்ற நிலை உருவாகி, குறுந்தொழில் முனைவோர் அதிலிருந்து விலகி கூலி வேலைக்குச் செல்வது அதிகரித்திருக்கிறது. அதேபோல தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையும் மறைமுகமாக மூலப்பொருள்களின் விலையைப் பாதிக்கிறது. அண்மைக் காலத்தில் மட்டும் போக்குவரத்து செலவு 20 சதவீதத்துக்கு மேல் உயர்ந்திருக்கிறது.
 எனவே மூலப்பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மூலப்பொருள் வங்கி போன்ற நீண்டகாலத்துக்கு பயனளிக்கக் கூடிய திட்டங்களைச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முன்வர வேண்டும் என்றார் அவர்.
 -க.தங்கராஜா

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT