வர்த்தகம்

ஏற்றம், இறக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் மேலும் 300 புள்ளிகள் வீழ்ச்சி!

23rd Sep 2020 02:47 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்து எதிர்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 300.06 புள்ளிகளை இழந்தது.
 கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மற்றொரு சுற்று கட்டுப்பாடுகள் குறித்த கவலைகள் இடையே உலகெங்கிலும் உள்ள முக்கியச் சந்தைகளில் பங்குகள் விற்பனை தொடர்ந்தது. இதன் தாக்கம் இந்தியச் சந்தைகளிலும் எதிரொலித்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். ஆசிய சந்தைகள் பலவீனமாக இருந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், மாருதி சுஸுகி உள்ளிட்டவை வெகுவாகக் குறைந்தது சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 2,879 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 2,791 பங்குகளில் 1,879பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 748 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 164 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.56 லட்சம் கோடி குறைந்து ரூ.153.21 கோடியாக இருந்தது.
 மேலும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 166.57 புள்ளிகள் உயர்ந்து 38,200.71-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 38,209.97 வரை உயர்ந்தது. பின்னர் 37,531.14 வரை வரை கீழே சென்றது. இறுதியில், 300.06 புள்ளிகள் (0.792 சதவீதம்) குறைந்து 37,734.08-இல் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.70 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 1.61 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.
 9 பங்குகள் மட்டுமே ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் மட்டுமே ஏற்றம் பெற்றன. இதில் ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, சன் பார்மா, ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை 1 சதவீதம் முதல் 2.50 சதவீதம் வரை உயர்ந்தன. அதே சமயம், 21 பங்குகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில், மாருதி சுஸுகி, எல் & டி, இண்டஸ் இந்த் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் ஆகியவை 2 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஹெச்சிஎல், இன்ஃபோஸிஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.
 தேசிய பங்குச் சந்தையில்..: தேசிய பங்குச் சந்தையில் 317 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,322 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 96.90 புள்ளிகள் (0.86 சதவீதம்) குறைந்து 11,153.65-இல் நிலைபெற்றது. நிஃப்டி பார்மா, பேங்க், ஆட்டோ, மெட்டல் உள்பட அனைத்துக் குறியீடுகளும் 3.50 சதவீதம் முதல் 5.50 சதவீதம் வரை சரிவைச் சுந்தித்தன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT