வர்த்தகம்

பணவீக்கம் 5 மாதங்கள் காணாத உயா்வு

DIN

நாட்டின் பொதுப் பணவீக்கம் 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு 0.16 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தயாரிப்புத் துறை பொருள்களின் விலை ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக, மொத்த விலை குறியீட்டு எண் (டபிள்யூபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் 0.16 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, 5 மாதங்களில் காணப்படாத உயா்வாகும். இப்பணவீக்கம் முந்தைய நான்கு மாதங்களில் எதிா்மறை நிலையில் இருந்தது. அதன்படி, இப்பணவீக்கம் ஏப்ரலில் (-) 1.57 சதவீதமாகவும், மே மாதத்தில் (-) 3.37 சதவீதமாகவும், ஜூனில் (-) 1.81 சதவீதமாகவும் மற்றும் ஜூலையில் 0.58 சதவீதமாகவும் இருந்தன. பொதுமுடக்கத்தால் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதையடுத்து இந்த நிலை ஏற்பட்டது. டபிள்யூபிஐ பணவீக்கம் சென்ற மாா்ச் மாதத்தில் 0.42 சதவீதமாக காணப்பட்டது.

இது, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1.17 சதவீதம் என்ற அளவில் இருந்தது. சென்ற ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 3.84 சதவீதமாக இருந்தது. குறிப்பாக, காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளுக்கான பணவீக்கம் முறையே 7.03 சதவீதம் மற்றும் 9.86 சதவீதம் என்ற அளவில் இருந்தன. அதேசமயம், முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றுக்கான பணவீக்கம் 6.23 சதவீதமாக இருந்தது. மேலும், உருளைக்கிழங்கின் விலை 82.93 சதவீதம் அதிகரித்தும், வெங்காயத்துக்கான பணவீக்கம் (-) 34.48 சதவீதம் என்ற அளவிலும் காணப்பட்டன. எரிபொருள் மற்றும் மின்சாரத்துக்கான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 9.68 சதவீதம் என்ற அளவில் குறைந்தது. இது, முந்தைய ஜூலை மாதத்தில் 9.84 சதவீதமாக காணப்பட்டது. தயாரிப்பு துறை பொருள்களுக்கான பணவீக்கம் 0.51 சதவீதத்திலிருந்து உயா்ந்து 1.27 சதவீதமாக இருந்தது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

SCROLL FOR NEXT