வர்த்தகம்

ஆர்ஜெண்டீனாவில் ராயல் என்பீல்ட் ஆலை

10th Sep 2020 01:59 AM

ADVERTISEMENT

 

சென்னை: இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்ட் ஆர்ஜெண்டீனாவில் தனது ஆலையை அமைத்துள்ளது. அங்கு வாகனங்கள் பொருத்தும் பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ராயல் என்பீல்ட் நிறுவனம் சென்னைக்கு வெளியே இப்போதுதான் முதல்முறையாக ஒரு ஆலையை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
ஆர்ஜெண்டீனா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் அருகே கேன்பனாவில் இந்த ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் ஹிமாலயன், இண்டர்செப்டர் 650, காண்டினென்டல் ஜிடி650 ஆகிய வாகனங்கள் இந்த மாதம் முதல் தயாரிக்கப்படவுள்ளன. 250 முதல் 750 சிசி வரையிலான இரு சக்கர வாகனத் தயாரிப்பில் சர்வதேச அளவில் பெரிதாக தடம் பதிக்க ராயல் என்பீல்ட் நிறுவனம் முயற்சித்து வருகிறது. இதற்காகவே தென் அமெரிக்க கண்டத்தில் இந்த ஆலையை அமைத்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், ராயல் என்பீல்ட் வாகனங்கள் ஆர்ஜெண்டீனா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. 
அந்த நாடுகளிலேயே ஆலை அமைக்கும்போது அந்த நாட்டைச் சேர்ந்த வாகனப் பிரியர்கள் மத்தியில் கூடுதல் மதிப்பைப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்ட் வாகனங்கள் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT