வர்த்தகம்

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 377 புள்ளிகள் முன்னேற்றம்

28th Oct 2020 02:13 AM | நமது நிருபர்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்தது. இருப்பினும்,  இறுதியில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 376.60 புள்ளிகள் உயர்ந்து 40,500 புள்ளிகளைக் கடந்து நிலைபெற்றது.
முன்னணி தனியார் வங்கியான கோட்டக் மஹிந்திரா பேங்க் பங்கின் விலை 12 சதவீதம் உயர்ந்தது.  அதன் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பை விட நன்றாக இருந்ததால் அதன் பங்குகளுக்கு தேவை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் பிற்பகலில் எஃப்எம்சிஜி பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடம் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து, சென்செக்ஸ் நிஃப்டி ஆகியவை வெகுவாக ஏற்றம் பெற்றன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
1,374 பங்குகள் வீழ்ச்சி
மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 2,835 பங்குகளில் 1,280 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,374 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 181 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வர்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு குறைந்து ரூ.1.18 லட்சம் கோடி உயர்ந்து  ரூ.159.79 லட்சம் கோடியாக இருந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.65 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 0.60 சதவீதமும் உயர்ந்தன.
சரிவிலிருந்து மீட்சி
சென்செக்ஸ்  காலையில்  53.58 புள்ளிகள் கூடுதலுடன்  40,199.08-இல் தொடங்கி 39,978.39 வரை கீழே சென்றது.  பின்னர், அதிகபட்சமாக 40,555.60 வரை உயர்ந்தது. இறுதியில் 376.60  புள்ளிகள்  (0.944 சதவீதம்) உயர்ந்து  40,522.10-இல் நிலைபெற்றது.  திங்கள்கிழமை சென்செக்ஸ் சரிவைச் சந்தித்த நிலையில்,  நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்தது. இருப்பினும், இறுதியில் நேர்மறையாக முடிந்தது.
கோட்டக் பேங்க் முன்னேற்றம்
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 19 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில், கோட்டக் பேங்க் 12.17 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக நெஸ்லே இந்தியா,  ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், என்டிபிசி, எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை 3 முதல் 6 சதவீதம் வரை உயர்ந்தன.  எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுஸýகி,  ரிலையன்ஸ் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.
டிசிஎஸ் சரிவு 
அதே சமயம்,  முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் 2.09 சதவீதம் குறைந்து  வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஓஎன்ஜிசி, இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி, எஸ்பிஐ, ஐடிசி, சன்பார்மா ஆகியவை 0.80 முதல்  2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில்...
தேசிய பங்குச் சந்தையில் 732 பங்குகள்  ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 862 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 121.65  புள்ளிகள் (1.03 சதவீதம்) உயர்ந்து 11,889.40-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 32 பங்குகள் ஏற்றம் பெற்றன. 18 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 
நிஃப்டி ஐடி,   பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் சரிவைச் சந்தித்ததன. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஏற்றம் பெற்றன. இதில் நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க்,  பைனான்சியல் சர்வீசஸ்  குறியீடுகள் 2 முதல் 3 சதவீதம் வரை உயர்ந்தன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT