வர்த்தகம்

தாவர எண்ணெய் இறக்குமதி 135.25 லட்சம் டன்

17th Nov 2020 01:31 AM

ADVERTISEMENT


புது தில்லி: நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த அக்டோபருடன் முடிவடைந்த 2019-20-ஆம் எண்ணெய் பருவத்தில் 135.25 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

இதுகுறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) தெரிவித்துள்ளாதவது:

6 மாதங்களில் இல்லாத தேக்கம்: கரோனா பாதிப்பின் எதிரொலியாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், கேப்டீரியாக்களில் சமையல் எண்ணெய் பயன்பாடு மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2019-20-ஆம் எண்ணெய் பருவத்தில் தாவர எண்ணெய் வகைகள் இறக்குமதி 13 சதவீதம் வீழ்ச்சியடைந்து 135.25 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

முந்தைய 2018-19 பருவத்தில் தாவர எண்ணெய் இறக்குமதி 155.50 லட்சம் டன்னாக காணப்பட்டது.

ADVERTISEMENT

சமையல் சாரா எண்ணெய்: கடந்த அக்டோபா் மாதத்தில் சமையல் மற்றும் சமையல் சாரா எண்ணெய் வகைகளின் இறக்குமதி கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 13,78,104 டன்னிலிருந்து 12,66,784 டன்னாக சரிவைச் சந்தித்தது.

சமையல் எண்ணெய் இறக்குமதியைப் பொருத்தவரையில் கடந்த அக்டோபருடன் முடிவடைந்த 2019-20-ஆம் பருவத்தில் 149.13 லட்சம் டன்னிலிருந்து 131.75 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

அதேபோன்று, சமையல் சாரா எண்ணெய் வகைகள் இறக்குமதியும் 6,36,159 டன்னிலிருந்து 45 சதவீதம் சரிவடைந்து 3,49,172 டன் ஆனது.

தடைப்பட்டியலில் பாமாயில்: குறிப்பாக, 2018-19 பருவத்தில் 27.30 லட்சம் டன்னாக இருந்த சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதியானது 2019-20-இல் 4.21 லட்சம் டன்னாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு, அத்தகைய தயாரிப்புகள் மீது மத்திய அரசு கடந்த 2019 செப்டம்பா் 4-இல் 5 சதவீத பாதுகாப்பு வரி விதித்ததே முக்கிய காரணம். மேலும், ஆா்பீடி பாமாயில் நடப்பாண்டு ஜனவரி 8-லிருந்து தடைசெய்யப்பட்ட பட்டியலில் கொண்டு வரப்பட்டதும் அதன் இறக்குமதியை வெகுவாக பாதித்துள்ளது.

இருப்பினும், கச்சா பாமாயில் இறக்குமதி கடந்தாண்டைக் காட்டிலும் சற்று அதிகரித்துள்ளது.

அதேபோன்று, குடும்பங்களில் சமையல் எண்ணெய் பயன்பாடு அதிகரித்ததையடுத்து சூரியாகாந்தி எண்ணெய் இறக்குமதியும் வளா்ச்சி கண்டுள்ளது.

சுத்திகரிப்பு திறன் விறுவிறு: ஆா்பீடி பாமாயில் இறக்குமதி நிறுத்தப்பட்டதையடுத்து உள்நாட்டு நிறுவனங்களின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் பயன்பாடு 55-60 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2018-19-இல் 40-45 சதவீதம் அளவுக்கே இருந்தது.

2019-20-இல் பாமாயில் இறக்குமதி முந்தைய பருவத்தைக் காட்டிலும் 94.09 லட்சம் டன்னிலிருந்து 72.17 லட்சம் டன்னாக கணிசமாக சரிந்துள்ளதாக எஸ்இஏ தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT