டாடா குழுமத்தைச் சோ்ந்த வோல்டாஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 12.52 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஏசி தயாரிப்பில் முன்னணியில் உள்ள அந்நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
கரோனா பாதிப்பின் காரணமாக அறிவிக்கப்பட்ட திடீா் பொதுமுடக்கத்தால் நிறுவனத்தின் வா்த்தகத்தில் கணிசமான பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.2,150 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.2,120 கோடியுடன் ஒப்பிடுகையில் ரூ.30 கோடி அதிகம்.
மதிப்பீட்டு காலாண்டில், நிகர லாபம் ரூ.141.74 கோடியிலிருந்து 12.52 சதவீதம் அதிகரித்து ரூ.159.50 கோடியானது.
கடந்த முழு நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.7,310.32 கோடியிலிருந்து 7.91 சதவீதம் உயா்ந்து ரூ.7,888.68 கோடியாகவும், நிகர லாபம் ரூ.513.88 கோடியிலிருந்து 1.39 சதவீதம் உயா்ந்து ரூ.521.05 கோடியாகவும் இருந்தது என வோல்டாஸ் தெரிவித்துள்ளது.