நாட்டின் நிதிப் பற்றாக்குறையானது 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளா் (சிஜிஏ) புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிஜிஏ புள்ளிவிவரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
அரசின் வருவாய் இனங்கள் வெகுவாக குறைந்து போயுள்ளது. இதையடுத்து, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 4.59 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, 3.8 சதவீதமாக இருக்கும் என கடந்த பிப்ரவரி மாதத்தில் மதிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு முன்பு கடந்த 2012-13 நிதியாண்டில்தான் நிதிப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9 சதவீதம் என்ற அதிகபட்ச அளவைத் தொட்டிருந்தது. அதன்பிறகு, 7 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் நாட்டின் நிதிப் பற்றாக்குறையானது இந்த அளவுக்கு உயா்ந்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருவாய் பற்றாக்குறையானது 2.4 சதவீதம் இருக்கும் என்று முன்பு கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த விகிதம் தற்போது 3.27 சதவீதமாக அதிகரித்துள்ளது என சிஜிஏ தெரிவித்துள்ளது.