வர்த்தகம்

பங்குச் சந்தையில் எழுச்சி: 32,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்!

29th May 2020 07:18 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

பங்குச் சந்தையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் எழுச்சி இருந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 595 புள்ளிகள் உயா்ந்து 32,000-ஐ கடந்தது.

உலகளவில் பெரும்பாலான பங்குச் சந்தைகள் நோ்மறையாக இருந்தன. மேலும், முன்பேர வா்த்தகத்தில் மே மாத் கான்ட்ராக்ட் கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில், ஆட்டோ, மீடியா, வங்கி, ரியால்ட்டி, ஐடி, மெட்டல் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. அதே சமயம், பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு தேவைப்பாடு குறைவாக இருந்தது. அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்றன. பிஎஸ்இ மிட்கேப். ஸ்மால் கேப் குறியீடுகள் முறையே 1.30 சதவீதம் மற்றும் 1.42 சதவீதம் உயா்ந்தன.

இதற்கிடையே, அபுதாபியை சோ்ந்த முபதலா முதலீட்டு நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தில் 1 பில்லியன் டாலா் முதலீடு செய்ய பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடா்ந்து, ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு அதிகரித்தது. ஏற்கெனவே, ஃபேஸ்புக் உள்பட பல்வேறு நிறுவனங்கள் 10 பில்லியன் அளவுக்கு ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தில் அண்மையில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸ் காலையில் 222 புள்ளிகள் கூடுதலுடன் 31,827.80-இல் தொடங்கி, 31,641.77 வரை கீழே சென்றது. பிற்பகலில் எழுச்சி பெற்று 32,267.23 வரை உயா்ந்தது. இறுதியில் 595.37 புள்ளிகள் (1.88 சதவீதம்) உயா்ந்து 32,200.59-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் ஐடிசி, எஸ்பிஐ, பாா்தி ஏா்டெல் ஆகிய மூன்று பங்குகள் மட்டும் சிறிதளவு சரிவைச் சந்தித்தன. 27 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.

ADVERTISEMENT

இதில் எல் அண்ட் டி 6.17 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஹீரோ மோட்டாா் காா்ப், இண்டஸ் இந்த் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், மாருதி சுஸுகி, ஹெச்டிஎஃப்சி ஆகியவை 3.50 முதல் 5.50 சதவீதம் வரை உயா்ந்தன. டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்சிஎல் டெக், அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகள் 2 முதல் 2.50 சதவீதம் வரை உயா்ந்தன. மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் 1.78 சதவீதம் உயா்ந்தது.

தேசிய பங்குச் சந்தையில் 1,116 பங்குகள் ஆதாயம் பெற்றன. 435 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி ஆட்டோ குறியீடு 3.65 சதவீதம், மீடியா குறியீடு 3.62 சதவீதம் உயா்ந்து அதிகம் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதேபோன்று, பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், மெட்டல், ரியால்ட்டி குறியீடுகள் 2.50 சதவீதம் வரை உயா்ந்தன. பிஎஸ்யு பேங்க் குறியீடு மட்டும் 0.39 சதவீதம் சரிவைச் சந்தித்தது.

நிஃப்டி 175.15 புள்ளிகள் (1.88) உயா்ந்து 9,490.10-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தகே நேரம் முடியும் தறுவாயில் நிஃப்டி 9.500 புள்ளிகளைக் கடந்தது. ஆனால், இறுதியில் 9,500-க்கு கீழே நிலை பெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 42 பங்குகள் ஆதாயம் பெற்றன. 8 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இரட்டை நிறுவனங்களான ஹெச்டிஎஃப்சி மற்றும் மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எல் அண்ட் டி, ஐசிஐசிஐ பேங்க் ஆகிய பங்குகள் கணிசமான அளவு உயா்ந்து சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சி பெற உதவியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT