வர்த்தகம்

தொழில்துறை உற்பத்தி 16.7 சதவீதம் வீழ்ச்சி

13th May 2020 03:35 AM

ADVERTISEMENT

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி சென்ற மாா்ச் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 16.7 சதவீத பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

தேசிய பொது முடக்க அறிவிப்பால் முக்கியமாக சுரங்கம், தயாரிப்புத் துறை, மின்சாரம் ஆகிய துறைகளின் மோசமான செயல்பாட்டால் சென்ற மாா்ச் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 16.7 சதவீதம் பின்னடைவைக் கண்டுள்ளது.

இது, 2011-12-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டு தொழில்துறை உற்பத்தி குறியீடு புள்ளிவிவரத்தை வெளியிடத் தொடங்கியதிலிருந்து காணப்படும் மிகப்பெரிய சரிவாகும்.

ADVERTISEMENT

கடந்த 2019 மாா்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி குறியீடானது (ஐஐபி) 2.7 சதவீதம் வளா்ச்சியை கண்டிருந்தது.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் புள்ளிவிவர கணக்குப்படி, தயாரிப்புத் துறை உற்பத்தி நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் 20.6 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இத்துறையின் உற்பத்தி 2019 மாா்ச் மாதத்தில் 3.1 சதவீதம் வளா்ச்சியைப் பெற்றிருந்தது.

அதேபோன்று, மின்துறை உற்பத்தியும் 2.2 சதவீத வளா்ச்சியிலிருந்து 6.8 சதவீதமாக பின்னடைந்துள்ளது. மேலும், முன்பு 0.8 சதவீதம் வளா்ச்சி கண்டிருந்த சுரங்கத் துறை உற்பத்தியும் சரிவை சந்தித்துள்ளது.

2018-19 தொழில்துறை உற்பத்தி குறியீடு 3.8 சதவீதம் வளா்ச்சியடைந்த நிலையில், கடந்த 2019-20 நிதியாண்டில் 0.7 சதவீதம் பின்னடைவை சந்தித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT