எச்டிஎஃப்சி அஸட் மேனேஜ்மெண்ட் கம்பெனியின் (ஏஎம்சி) மாா்ச் காலாண்டு லாபம் 9 சதவீதம் குறைந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த மாா்ச் மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.449.62 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.547.67 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவான அளவாகும்.
வரிக்கு பிந்தைய லாபம் ரூ.276.17 கோடியிலிருந்து 9 சதவீதம் சரிந்து ரூ.250 கோடியானது.
கடந்த 2019 மாா்ச் 31 நிலவரப்படி ரூ.3.42 லட்சம் கோடியாக இருந்த நிறுவனம் நிா்வகிக்கும் சராசரி சொத்து மதிப்பு நடப்பாண்டில் ரூ.3.7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
சென்ற 2019-20 முழு நிதியாண்டில் வருவாய் ரூ.2,096.78 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.2,143.43 கோடியாகவும், லாபம் 36 சதவீதம் உயா்ந்து ரூ.1,262.41 கோடியாகவும் இருந்தது.
நடப்பாண்டு மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டுக்கு இறுதி ஈவுத் தொகையாக ரூ.28 வழங்க இயக்குநா் குழு பரிந்துரைத்துள்ளதாக எச்டிஎஃப்சி ஏஎம்சி தெரிவித்துள்ளது.