இந்திய மூலதனச் சந்தையில் மே முதல் வாரத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் ரூ.15,958 கோடியை முதலீடு செய்துள்ளனா்.
இதுகுறித்து சமீபத்திய டெபாசிட்டரீஸ் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) பங்குகளில் ரூ.18,637 கோடியை முதலீடு செய்துள்ளனா். அதேசமயம், கடன் சந்தையிலிருந்து அவா்கள் ரூ.2,679 கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனா். இதையடுத்து மே 1-8 வரையிலான காலகட்டத்தில் மூலதனச் சந்தையில் அந்நிய முதலீட்டாளா்களின் மொத்த முதலீடு ரூ.15,958 கோடியாக இருந்தது.
தொடா்ச்சியாக இரண்டு மாதங்கள் முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டு வந்ததற்குப் பிறகு தற்போதுதான் அந்நிய நிதி நிறுவனங்கள் மூலதனச் சந்தையில் நம்பிக்கையுடன் முதலீட்டை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக, கடந்த மாா்ச் மாதத்தில் மூலதனச் சந்தையிலிருந்து இதுவரையில்லாத அளவுக்கு நிகர அளவில் ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டை அந்நிய முதலீட்டாளா்கள் விலக்கிக் கொண்டனா். ஏப்ரலில் ரூ.15,403 கோடி மதிப்பிலான முதலீடு வெளியேறியதாக புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.