வர்த்தகம்

கரும்பை பின்னுக்குத் தள்ளிய வாழை சாகுபடி

16th Mar 2020 02:00 AM

ADVERTISEMENT

ஈரோடு: வெட்டிய கரும்புக்கு 6 மாதம் வரை பணம் தராமலும், அரசு அறிவித்த விலையை வழங்காமலும் சர்க்கரை ஆலைகள் பிடிவாதம் பிடிப்பதால், ஈரோடு மாவட்டத்தில் கரும்பு சாகுபடி 5,000 ஏக்கராக குறைந்துள்ளது. அதே சமயத்தில் வாழை சாகுபடி 75,000 ஏக்கர் அளவுக்கு அதிகரித்துள்ளது.
 ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், பவானி வட்டங்களில் பரவலாக வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக வாழை சாகுபடி படிப்படியாக அதிகரித்து இப்போது நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை சாகுபடிப் பரப்பு அதிகரித்துள்ளது. நெல் சாகுபடி 1.25 லட்சம் ஏக்கர் வரை இருக்கிறது. அதே சமயத்தில் வாழை சாகுபடி 75,000 ஏக்கராக உள்ளது.
 இதற்கு காரணம் கரும்பு சாகுபடி குறைந்ததுதான் என்கின்றனர் விவசாயிகள். ஈரோடு மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை 3-ஆவது இடத்தில் இருந்த கரும்பு சாகுபடிப் பரப்பு இப்போது 10- ஆவது இடத்திற்கு சென்றுவிட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏறத்தாழ ஒரு லட்சம் ஏக்கர் அளவுக்கு சாகுபடி செய்யப்பட்ட கரும்பு, நிகழாண்டில் வெறும் 5,000 ஏக்கர் அளவுக்கு குறைந்துவிட்டது.
 சர்க்கரை ஆலைகள் கடந்த 7 ஆண்டுகளாக அரசு அறிவித்த விலையை வழங்க மறுப்பதும், வெட்டிய கரும்புக்கு 6 மாத காலம் வரை பணம் தராமல் இழுத்தடிப்பதுமே இதற்கு முக்கிய காரணம். ஆலைகளின் இந்த மோசமான நிலைப்பாட்டுக்குக் காரணம் அரசின் கொள்கைகள்தான் என்கிறார் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வழக்குரைஞர் சுபி.தளபதி.
 இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 பவானி, காவிரி ஆற்றுப் பாசனங்கள் உள்ள ஈரோடு மாவட்டத்தில் நிகழாண்டில் வெறும் 5,000 ஏக்கர் மட்டுமே கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பது மிகப் பெரிய வேதனை. 10 ஆண்டுகளுக்கு முன்னர்வரை சுமார் ஒரு லட்சம் ஏக்கர் வரை கரும்பு சாகுபடி செய்யப்பட்டதால்தான் ஈரோடு மாவட்டத்தில் இரண்டு சர்க்கரை ஆலைகள் தொடங்கப்பட்டன.
 அரசின் கொள்கைகளால் சர்க்கரை ஆலைகள் இப்போது கடும் நெருக்கடியில் உள்ளன. சர்க்கரை அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் உள்ளதால், உற்பத்திச் செலவைக் காட்டிலும் ரூ.10 வரை குறைவாக கிலோ ரூ. 32க்கு அரசுக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
 ஒரு குடும்பத்தின் மாத நுகர்வு அதிகபட்சமாக 3 கிலோ சர்க்கரை. கிலோவுக்கு ரூ.10 விலை உயர்த்தினால் கூட, மாதத்துக்கு கூடுதலாக ரூ. 30 தான் கூடுதல் செலவாகும். ஆனால் ஆட்சியாளர்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக உற்பத்தி விலையை விட குறைந்த விலைக்கு சர்க்கரையை வாங்கியும், வாங்கிய சர்க்கரைக்கு பல மாதங்களாகப் பணம் கொடுக்காமல் நிலுவை வைத்தும் ஆலைகளை முடக்கியுள்ளனர்.
 சர்க்கரை ஆலைகளில் உரிய விலை கிடைக்காதது, வெட்டிய கரும்புக்கான பணத்தை வாங்க மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பது போன்ற காரணங்களால் கரும்பு சாகுபடியைக் கைவிட்ட விவசாயிகள், கடந்த 7 ஆண்டுகளில் வாழை சாகுபடியை அதிகரிக்கத் தொடங்கினர். இதனால் மாவட்ட அளவிலான பயிர்களில் பத்தாம் இடத்தில் இருந்த வாழை சாகுபடி வேகமான வளர்ச்சிபெற்று இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
 ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை கதலி, செவ்வாழை, பூவன், ரஸ்தாளி, நேந்திரன், தேன்வாழை போன்ற வாழை ரகங்கள் பயிரிடப்படுகின்றன. இதில் பூவன், தேன்வாழை தவிர்த்து பிற ரகங்களுக்கு பராமரிப்புச் செலவு அதிகம். அதாவது உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் தேவை அதிகம். இதனால்தான் ஆண்டில் பெரும்பாலான நாள்கள் தார் ரூ.1,000-க்கு மேல் விற்கிறது.
 கடந்த 10 ஆண்டு புள்ளிவிவரத்தின்படி, 5 ஆண்டுகளாக உரம், பூச்சிமருந்துகளின் விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் வாழை சாகுபடி அதிகரித்துள்ளதுதான். உரம், பூச்சி மருந்துகளின் பயன்பாட்டைக் குறைக்கப் போராடி வரும் நிலையில், இதன் பயன்பாடு அதிகரித்து வருவது, மக்களின் உடல்நலனை மேலும் பாதிக்கும் என்றார்.
 மஞ்சள் பூமியையும் ஆக்கிரமிக்க தொடங்கிய வாழை:
 ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கொடுமுடி வட்டங்களில் சுமார் 30,000 ஏக்கர் மஞ்சள் சாகுபடி செய்யப்படும். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக மஞ்சளுக்குப் போதிய விலை கிடைக்காததால் சாகுபடி பரப்பளவு படிப்படியாகக் குறைந்து, நிகழாண்டில் 10,000 ஏக்கர் அளவுக்கு மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
 அதே சமயத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு வரை 2,000 ஏக்கருக்கும் குறைவாக இருந்த வாழை சாகுபடி இப்போது 10,000 ஏக்கர் அளவுக்கு அதிகரித்துள்ளது என்கிறார் தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு.
 "ஈரோடு மஞ்சள் உலகத்தரம் வாய்ந்தது, புவிசார் குறியீடு பெற்றுள்ளது. ஆனால் இதன் சாகுபடி பரப்பு மட்டும் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலை கட்டாயம் மாற வேண்டும். அதற்கு ஆந்திரப் பிரதேச மாநில அரசு போன்று தமிழக அரசும் மஞ்சளுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயித்து நேரடியாக மஞ்சளைக் கொள்முதல் செய்ய வேண்டும். ஈரோட்டில் மஞ்சள் வாரியத்தை ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.
 - கே. விஜயபாஸ்கர்

ADVERTISEMENT
ADVERTISEMENT