வர்த்தகம்

மே மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 87% சரிவு

11th Jun 2020 10:29 PM

ADVERTISEMENT

பொதுமுடக்கம் காரணமாக, கடந்த மே மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 86.97 சதவீதம் குறைந்ததாக, ஆட்டோமொபைல் டீலா் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலா்ஸ் அசோசியேஷன்ஸ்-ஃபடா) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த ஆண்டு மே மாதத்தில் 2,35,933 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகின. ஆனால், கடந்த மே மாதத்தில் 30,749 பயணிகள் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின. அதாவது, வாகன விற்பனை 86.97 சதவீதம் குறைந்துவிட்டது.

இரு சக்கர வாகனங்களைப் பொருத்தவரை 88.8 சதவீதம் விற்பனை குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 14,19,842 இருசக்கர வாகனங்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதத்தில் 1,59,039 இருசக்கர வானங்கள் மட்டுமே விற்பனையாகின.

ADVERTISEMENT

இதேபோல், மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 96.34 சதவீதம் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு மே மாதம் 51,430 வாகனங்கள் விற்பனையான நிலையில், நிகழாண்டு மே மாதம் 1,881 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின. வணிக பயன்பாட்டுக்கான வாகனங்களின் விற்பனையும் 96.63 சதவீதம் குறைந்தது.

ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் அனைத்து வகையான வாகனங்களின் விற்பனை 88.87 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 18,21,650 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில், நிகழாண்டு மே மாதத்தில் 2,02,697 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஃபடா அமைப்பின் தலைவா் ஆசிஷ் ஹா்ஷ்ராஜ் காலே கூறுகையில், ‘மே மாத இறுதியில் 60 சதவீத விற்பனை நிலையங்களும், 80 சதவீத பணிமனைகளும் திறக்கப்பட்டன. இருப்பினும் பொதுமுடக்கம் காரணமாக மக்கள் வெளியே வருவதற்குத் தயங்குவதால் வாகன விற்பனையில் மந்த நிலை நீடிக்கிறது’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT