வர்த்தகம்

செல்லிடப்பேசி உதிரிபாகங்கள் விலை உயர்வு

11th Jun 2020 10:33 AM

ADVERTISEMENT

பொதுமுடக்கத்தால் இறக்குமதி தடை

கரோனா பொது முடக்கம் காரணமாக இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் செல்லிடப்பேசிகளின் உதிரிபாகங்கள் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 மக்களின் அத்தியாவசியப் பயன்பாடாக செல்லிடப்பேசி ஆகி உள்ளது. 2019 புள்ளிவிவரப்படி இந்தியாவில் 85 சதவீத மக்கள் செல்லிடப்பேசி பயன்படுத்துகின்றனர். அதில் 65 சதவீத மக்கள் இணைய வசதி, தொடுதிரை வசதி கொண்ட "ஆன்ட்ராய்டு' செல்லிடப்பேசிகளையும், 20 சதவீத மக்கள் சாதாரண வகை செல்லிடப்பேசிகளையும் பயன்படுத்துகின்றனர்.
 குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் செல்லிடப்பேசி பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது அதற்கான உதிரி பாகங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை, செல்லிடப்பேசிகள் மட்டுமல்லாமல், அவற்றின் உதிரி பாகங்களும் 90 சதவீதம் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன.
 மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே கொரியா, பின்லாந்து, கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. இருப்பினும் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு விற்பனைக்கு வரும் செல்லிடப்பேசிகளின் விலை, மற்ற நாட்டுத் தயாரிப்புகளைக் காட்டிலும் மிகக் குறைவு என்பதால், இந்தியாவில் சீனத் தயாரிப்பு செல்லிடப்பேசிகளுக்கு வரவேற்பு அதிகம்.
 இந்நிலையில் சீனாவில் பரவிய கரோனா நோய்த்தொற்றால் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவுக்கு செல்லிடப்பேசிகள், உதிரிபாகங்கள் இறக்குமதி தடைபட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 24 முதல் இந்தியாவிலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் பொழுதுபோக்குக்காக செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்தது.
 இதனால் செல்லிடப்பேசிகள் பழுதடைவது அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, செல்லிடப்பேசி உதிரிபாகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்படாத சூழலைப் பயன்படுத்தி, பெரும்பாலான மொத்த வியாபாரிகள், தங்களிடம் ஏற்கெனவே உள்ள உதிரி பாக இருப்புகளை, சிறு விற்பனையாளர்கள், பழுது நீக்கும் மையங்களுக்கு கூடுதல் விலைக்கு விற்கின்றனர். அவர்கள் தங்களது லாபத்தை சேர்த்து, இறுதியில் பயனாளிகளுக்கு அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால் பழுது நீக்குவது, உதிரிபாகங்களுக்காக பெரும் தொகையைச் செலவிடும் நிலை செல்லிடப்பேசி பயன்படுத்துவோருக்கு ஏற்பட்டுள்ளது.
 இது தொடர்பாக, கோவை மாவட்ட செல்லிடப்பேசி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.மன்சூர் அலி கூறியதாவது: பொது முடக்கத்தால் பொதுமக்கள் பொழுதுபோக்கு, திரைப்படம் பார்ப்பது, விளையாடுவது, விடியோ காலில் பேசுவது போன்ற காரணங்களால் செல்லிடப்பேசியின் பயன்பாடு அதிகரித்தது. இதனால் செல்லிடப்பேசியின் ஸ்பீக்கர், டிஸ்பிளே, பேட்டரி, வால்யூம் சிஸ்டம் போன்றவை பழுதடைவது அதிகரித்தது. பொதுமுடக்க தளர்வுக்குப் பிறகு, உதிரிபாகங்களை மாற்றி, செல்லிடப்பேசிகளின் பழுதுகளை நீக்க வரும் மக்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
 கோவையில் சீனத் தயாரிப்பு செல்லிடப்பேசிகளுக்கு உதிரிபாகங்கள் விற்பனை செய்து வந்த 150க்கும் மேற்பட்ட மொத்த விற்பனையாளர்கள் உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட தங்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். 70 மொத்த விற்பனையாளர்கள் மட்டுமே தற்போது சிறு வியாபாரிகள், பழுது நீக்கும் மையங்களுக்கு உதிரிபாகங்களை விற்று வருகின்றனர். புதிதாக இறக்குமதி இல்லாததாலும், உதிரி பாகங்களுக்குத் தேவை அதிகரித்துள்ளதாலும் இச்சூழலைப் பயன்படுத்தி சில மொத்த வியாபாரிகள், செல்லிடப்பேசி உதிரிபாகங்களை இருமடங்கு விலைக்கு விற்கின்றனர்.
 உதாரணமாக, பொதுமுடக்கத்துக்கு முன்பு செல்லிடப்பேசியின் டிஸ்பிளே பாகம் ரூ.1,300 ஆக இருந்தது, தற்போது ரூ.2,800 ஆக அதிகரித்துள்ளது. இதே பொருள் சிறு வியாபாரிகள், பழுதுநீக்கும் மையங்கள் மூலம் பயனாளியைச் சென்றடையும்போது மேலும் விலை அதிகரிக்கும்.
 சீனாவில் இருந்து கப்பல், விமானங்கள் மூலமாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் செல்லிடப்பேசிகள், உதிரிபாகங்களில் பெருமளவு மும்பை, புதுதில்லியில் உள்ள மொத்த வியாபாரிகள் மூலமாகவே கொள்முதல் செய்யப்படுகின்றன.
 அவர்களின் மூலமாகவே மற்ற மாநிலங்களுக்கு சரக்கு வாகனங்கள் மூலமாக அனுப்பிவைக்கப்படுகின்றன. தற்போது உள்ள சூழலில் இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடங்கினால் மும்பை, புதுதில்லி பகுதிகளில் இருந்து தென் மாநிலங்களுக்கு கணிசமாக செல்லிடப்பேசிகள் மற்றும் உதிரி பாகங்கள் வரத்து அதிகரிக்கும். இதன் மூலம் விலை குறையலாம். இருப்பினும் இறக்குமதி தடை நீங்கினால் மட்டுமே பழைய விலையில், கடைகளில் உதிரி பாகங்கள் பெற முடியும் என்றார்.
 இணைய வழிக் கல்விக்கு அவசியச் செலவு
 பொதுமுடக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் 70 நாள்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இணையம் (ஆன்லைன்) மூலமாக வகுப்புகளை நடத்த சில கல்வி நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. கணிப்பொறி, மடிக்கணினி இல்லாத பெரும்பாலான பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர், தங்களின் ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசி மூலமாகவே, தங்கள் குழந்தைகளை இணைய வகுப்பில் ஈடுபடுத்துகின்றனர். இந்த வகுப்புகளுக்காக பெற்றோர், தங்கள் செல்லிடப்பேசிகளின் பழுதடைந்துள்ள பாகங்களை, அவசியம் கருதி அதிகத் தொகை செலவிட்டு மாற்றுகின்றனர்.
 செல்லிடப்பேசிகளின் விலை அதிகரிப்பு
 பொதுமுடக்கத்துக்கு முன்பு இந்தியாவில் விற்கப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு செல்லிடப்பேசிகளின் விலை தற்போது 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய செல்லிடப்பேசி பெட்டிகளில் அதிகபட்ச விலை (எம்.ஆர்.பி.) குறிப்பிடப்பட்டிருந்தாலும், கடைகளில் 5 சதவீதம் கூடுதல் விலைக்கே விற்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு 6 சதவீதம் ஜி.எஸ்.டி கூடுதலாக விதிக்கப்பட்டதால் உயர்த்தப்பட்ட செல்லிடப்பேசிகளின் விலையானது, தற்போது மேலும் உயர்ந்துள்ளதால் பயனாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT