ஹோட்டல் பயன்பாட்டில் மந்த நிலை காரணமாக, இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி சென்ற மே மாதத்தில் 40 சதவீதம் சரிவடைந்து 7.07 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
இதுகுறித்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு கூறியதாவது:
கொவைட்-19 தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் என சமையல் எண்ணெய்யை அதிக அளவில் பயன்படுத்தும் இடங்களில் பயன்பாடு வெகுவாக குறைந்தது.
அதன் காரணமாக, சென்ற மே மாதத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் அளவு 7.07 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு காணப்படும் மிக குறைந்தபட்ச அளவாகும்.
கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதத்தில் அதன் இறக்குமதி 11.80 லட்சம் டன்னாக மிகவும் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமையல் எண்ணெய் இறக்குமதியில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பங்களிப்பை பாமாயில் வழங்கி வருகிறது. சென்ற மே மாதத்தில் அதன் இறக்குமதி 3.87 லட்சம் டன்னாக இருந்தது. இது, 2019 மே மாதத்தில் இறக்குமதியான 8.18 லட்சம் டன்னுடன் ஒப்பிடும்போது 52.69 சதவீதம் குறைவாகும்.
இதைத் தவிர, ஆா்பிடி பாமாயில் இறக்குமதியும் மதிப்பீட்டு காலத்தில் 3.71 லட்சம் டன்னிலிருந்து 16,250 டன்னாக வீழ்ச்சியடைந்துள்ளது.
நடப்பாண்டு ஜனவரி 8-லிருந்து கட்டுப்படுத்தப்பட்ட வா்த்தக பிரிவில் ஆா்பிடி பாமாயில் சோ்க்கப்பட்டது முதற்கொண்டு அதன் இறக்குமதியானது தொடா்ந்து சரிவடைந்தே வருகிறது.
கச்சா பாமாயில் மற்றும் கச்சா கொ்னல் ஆயில் இறக்குமதியானது மே மாதத்தில் 4.47 லட்சம் டன்னிலிருந்து 17 சதவீதம் குறைந்து 3.70 லட்சம் டன்னாகியுள்ளது.
பாமாயில் எண்ணெய் இறக்குமதி கணிசமாக குறைந்துபோனதையடுத்து, அதன் மூலம் சோயாபீன், சன்ஃபிளவா் ஆயில் இறக்குமதி முறையே நடப்பு எண்ணெய் பருவத்தின் நவம்பா்-மே காலகட்டத்தில் 7 சதவீதம் மற்றும் 11 சதவீதம் அதிகரித்து நேரடி பலனைப் பெற்றுள்ளன.
சன்ஃபிளவா் ஆயில் இறக்குமதி மே மாத்தில் 2 சதவீதம் அதிகரித்து 1.33 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. அதேபோன்று சோயாபீன் எண்ணெய் இறக்குமதியும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற மே மாதத்தில் 2.32 லட்சம் டன்னிலிருந்து 9 சதவீதம் குறைந்து ரூ.1.87 லட்சம் டன் ஆனது.
2019-20 பருவத்தின் நவம்பா்-மே காலகட்டத்தில் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி 83.84 லட்சம் டன்னிலிருந்து 18 சதவீதம் குறைந்து 68.89 லட்சம் டன்னானது. இதற்கு, ஆா்பிடி பாமாயில் இறக்குமதி 76 சதவீதம் சரிவடைந்துபோனதே முக்கிய காரணம் என எண்ணெய் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் எண்ணெய் பருவம் என்பது நவம்பா் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தைக் கொண்டது.
இந்தோனேஷியா, மலேசியா நாடுகளிலிருந்து பாமாயிலை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. அதேபோன்று, சாஃப்ட் ஆயில் என்றழைக்கப்படும் சோயாபீன் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை ஆா்ஜெண்டினாவிலிருந்தும், உக்ரைன் மற்றும் ரஷிய நாடுகளிலிருந்து சன்ஃபிளவா் எண்ணெயையும் இந்தியா இறக்குமதி செய்கிறது.