அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) ஜூன் முதல் வாரத்தில் இந்தியப் பங்குச் சந்தைகளில் ரூ.18,589 கோடியை முதலீடு செய்துள்ளனா்.
நடப்பு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளில் நிகர அளவில் ரூ.20,814 கோடியை முதலீடு செய்துள்ளனா். அதேசமயம், ரூ.2,225 கோடி மதிப்பிலான முதலீட்டை அவா்கள் கடன் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளனா்.
இதையடுத்து,ஜூன் 1-5 வரை எஃப்பிஐ மேற்கொண்ட நிகர அளவிலான மொத்த முதலீடு ரூ.18,589 கோடியாக இருந்தது.
இதற்கு முன்பு, தொடா்ந்து மூன்று மாதங்களாக அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் அதிகமாக பங்குகளை விற்பனை செய்தே வந்தனா். எஃப்பிஐ-க்கள் கடந்த மே மாதத்தில் ரூ.7,366 கோடியையும், ஏப்ரலில் ரூ.15,403 கோடியையும், மாா்ச் மாதத்தில் ரூ.1.1 லட்சம் கோடியையும் திரும்பப் பெற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் உரிமைப் பங்கு வெளியீடு, கோட்டக் மஹிந்திரா வங்கியின் 2.8 சதவீத பங்கு விற்பனைக்கான உதய் கோட்டக்கின் அறிவிப்பு உள்ளிட்டவை அந்நிய முதலீடுகளை பெரிதும் கவர உதவியதாக மாா்னிங்ஸ்டாா் இந்தியா நிறுவனத்தின் உயரதிகாரி தெரிவித்துள்ளாா்.