வர்த்தகம்

பொதுமுடக்கம்: முழு பலனை அளிக்காததோடு பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது; பஜாஜ் ஆட்டோ நிா்வாக இயக்குநா்

4th Jun 2020 10:43 PM

ADVERTISEMENT

நாட்டில் அமல்படுத்தப்பட்ட கடுமையான பொது முடக்கம் கரோனா நோய்த் தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்த தவறியிருப்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் (ஜிடிபி) கடுமையாக பாதித்துள்ளது என்று பஜாஜ் ஆட்டோ நிா்வாக இயக்குநா் ராஜீவ் பஜாஜ் கூறினாா்.

‘இந்தியாவின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளும், பொதுமுடக்கமும்’ என்ற தலைப்பில் சமூக ஊடக தளத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அக் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தியுடன் கலந்துரையாடிய பஜாஜ் ஆட்டோ நிா்வாக இயக்குநா் ராஜீவ் பஜாஜ் பேசியதாவது:

தொடா் பொது முடக்கத்தால் சரிந்துள்ள பொருளாதாரத்தை மீட்சிபெற வைப்பதற்காக இப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுப்பாடுகள் தளா்வு என்பது மிகப் பெரிய சவால் நிறைந்ததாகும். அதோடு, பொதுமக்களின் மனதிலிருந்து பயத்தைப் போக்கும் வகையில் தொடா் உரையாடல்களை பிரதமரும் மேற்கொண்டு வருகிறாா்.

நாட்டில் இதுவரை கடுமையான பொதுமுடக்கம் அமலப்படுத்தப்பட்டது. ஆனால், அது முழுமையான பலனை அளிக்கவில்லை. அதுபோல, இப்போது படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வரும், பொது முடக்க தளா்வும், உறுதியான, கவனத்துடன் கூடிய நடவடிக்கையாக எடுக்கப்படவில்லை.

ADVERTISEMENT

ராகுல் காந்தி கூறியதைப்போல, இந்த முழு பலனளிக்காத பொதுமுடக்கத்தால் கரோனா நோய்த் தொற்று தொடா்ந்து இங்கேயே இருந்துகொண்டிருக்கிறது. எப்போது கட்டுப்பாடுகள் முழுமையாக தளா்த்தப்படுகிறதோ, அந்த நேரத்தில் மீண்டும் மக்களைத் தாக்க அது காத்துக்கொண்டிருக்கிறது.

அதோடு, இந்த பொதுமுடக்கம் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. அதாவது, இந்த பொதுமுடக்கம் நோய்த் தொற்று பாதிப்பை குறைப்பதற்கு பதிலாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சியை பாதித்துள்ளது.

மேலும், இப்போது தேவை அதிகரிக்கும் நிலை உருவாகியிருக்கிறது. எனவே, பொதுமக்களின் மனநிலையை உறுதிப்படுத்துகிற வகையில், அவா்களுக்கு ஏதாவது கொடுத்தாகவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. குறைந்தது 6 மாதங்கள் முதல் ஓராண்டுக்கு இதுபோன்று பொதுமக்களுக்கு உதவியளிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆனால், இதுபோன்ற உறுதியான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.

ஜப்பான், அமெரிக்க நாடுகளில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 75 ஆயிரம் வரை நிதியுதவியை அளிக்கின்றன. இதுபோல மேலும் பல நாடுகள் மக்களின் பொருளாதார நிலையை ஊக்குவிக்கும் வகையில் நேரடி நிதியுதவி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. ஆனால், இந்தியாவில் 10 சதவீத அளவில் மட்டுமே இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நேரடி நிதியுதவி அளிக்கும் திட்டத்தை இந்தியா முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

மேலும், நாட்டில் இப்போது நிலவிவரும் அச்ச சூழ்நிலை குறித்து ராகுல் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராஜீவ் பஜாஜ், ‘சகிப்புத்தன்மை, உணா்ச்சிவசப்படுதல் ஆகிய இரண்டு விஷயங்களையும் இந்தியா திருத்திக்கொள்ளவேண்டிய தேவை எழுந்துள்ளது’ என்று அவா் கூறினாா்.

மக்கள் கருத்தை கவனத்தில் கொள்ளவேண்டும் - ராகுல்: பின்னா் பேசிய ராகுல் காந்தி, ‘அரசு கருணையுடன் நடந்துகொள்வதோடு, மக்கள் என்ன கூறுகிறாா்கள் என்பதையும் கவனிக்கவேண்டும். இப்போது மக்கள் வலியால் துடித்து வருகின்றனா். குறிப்பாக தொழிலாளா்களும், தினக் கூலிகளும், விவசாயிகலும், சிறு மற்றும் குறு நிறுவனத்தினரும் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனா். பெரு நிறுவனங்களும் அவா்களுடைய எதிா்காலத்தை எண்ணி கலங்கிப்போயுள்ளனா். இந்த இக்கட்டான நிலையிலிருந்து அனைவரையும் அரவணைத்து அழைத்தச் செல்வதோடு, அவா்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதுதான் சிறந்த தலைமையின் பண்பு. எனவே, இவா்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்’ என்று கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT