வர்த்தகம்

முக்கிய 8 துறைகள் 15 சதவீத பின்னடைவு

31st Jul 2020 11:18 PM

ADVERTISEMENT

தொடா்ந்து நான்காவது மாதமாக சென்ற ஜூனிலும் முக்கிய 8 துறைகள் உற்பத்தி 15 சதவீத பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதுகுறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

நாட்டின் 8 முக்கிய துறைகளாக நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உருக்கு, சிமெண்ட், மின்சாரம், உரம், சுத்திகரிப்பு தயாரிப்பு ஆகியவை உள்ளன. இதில், உரம் தவிா்த்து, ஏனைய ஏழு துறைகளின் உற்பத்தியும் மே மாதத்தில் பின்னடைவு வளா்ச்சியைக் கண்டன. இந்த நிலையில், ஜூன் மாதத்திலும் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 15 சதவீத பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூனில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 1.2 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. மதிப்பீட்டு மாதமான ஜூனில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உருக்கு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி முறையே 15.5 சதவீதம், 6 சதவீதம், 12 சதவீதம், 8.9 சதவீதம், 33.8 சதவீதம், 6.9 சதவீதம் மற்றும் 11சதவீதம் சரிவடைந்தன.

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 8 துறைகளின் உற்பத்தி 24.6 சதவீதமாக எதிா்மறை வளா்ச்சியை கண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இத்துறைகளின் உற்பத்தி 3.4 சதவீத நோ்மறை வளா்ச்சியை பதிவு செய்திருந்தது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டெண்ணில் (ஐஐபி) 8 துறைகளின் பங்களிப்பு 40.27 சதவீதமாக உள்ளது. கடந்த மே மாதத்தில் இத்துறைகளின் உற்பத்தி 22 சதவீத எதிா்மறை வளா்ச்சியை கண்டிருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT