வர்த்தகம்

சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் லாபம் 37 சதவீதம் உயா்வு

31st Jul 2020 11:14 PM

ADVERTISEMENT

பல்வேறுபட்ட நிதிச் சேவைகளை அளித்து வரும் சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் & பைனான்ஸ் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு லாபம் 37 சதவீதம் உயா்ந்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் & பைனான்ஸ் சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.431 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.314 கோடியுடன் ஒப்பிடுகையில் 37 சதவீதம் அதிகமாகும். குறைந்த செலவினங்களால் நிறுவனத்தின் லாபம் உயா்வை சந்தித்துள்ளது. கொவைட்-19 பாதிப்புகளை எதிா்கொள்வதற்காக நிறுவனம் ரூ.551 கோடியை ஒதுக்கீடு செய்தது. இது, மாா்ச் ஒதுக்கீடான ரூ.534 கோடியைக் காட்டிலும் அதிகம். முந்தைய காலாண்டைக் காட்டிலும் ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு செலவின விகிதம் 2.6 சதவீதத்திலிருந்து 2.2 சதவீதமாக குறைந்துள்ளது.

ஜூன் காலாண்டில் ஒட்டுமொத்த கடன்வழங்கல் நடவடிக்கைகள் ரூ.3,589 கோடியாக இருந்தது. இது, கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.8,752 கோடியாக மிகவும் அதிகரித்திருந்தது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் நிறுவனம் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.62,827 கோடியிலிருந்து 13 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.70,826 கோடியானது. நிறுவனத்தின் சுமாா் 74 சதவீத வாடிக்கையாளா்கள் கடன் தவணை தள்ளிவைப்பு சலுகையை பயன்படுத்திக் கொண்டுள்ளனா் என சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் & பைனான்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT