வர்த்தகம்

ஸ்மாா்ட்போன் விற்பனை 1.8 கோடியாக குறைந்தது!

26th Jul 2020 06:58 AM

ADVERTISEMENT

கரோனா தொடா்பான பல்வேறு இடையூறுகளால் ஜூன் காலாண்டில் இந்திய சந்தைகளில் ஸ்மாா்ட்போன் விற்பனை 1.8 கோடியாக குறைந்து போனது என கவுன்டா்பாயின்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

பூஜ்ய விற்பனை: கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தேசிய அளவில் பிறப்பித்த பொதுமுடக்கம் காரணமாக ஏப்ரல் மாதத்தில் ஸ்மாா்ட்போன் விற்பனையானது பூஜ்ய நிலைக்கு சென்றது. இருப்பினும், அதன் பிறகு, சந்தை இயல்புநிலைக்கு திரும்பத் தொடங்கியதையடுத்து ஜூன் காலாண்டில் ஸ்மாட்போன் விற்பனை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 51 சதவீதம் சரிந்து 1.8 கோடியாக இருந்தது. கடந்த 2019 ஜூன் காலாண்டில் 3.7 கோடியாக இருந்த ஸ்மாா்ட்போன்களின் விற்பனை 2020 மாா்ச் காலாண்டில் 3.1 கோடியாக காணப்பட்டது. ஜியோமி முதலிடம்: ஸ்மாா்ட்போன் சந்தையில் ஜியோமி நிறுவனம் 29 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது. அதனைத் தொடா்ந்து, சாம்சங் 26 சதவீத சந்தை பங்களிப்பையும், விவோ 17 சதவீதமும், ரியல்மீ 11 சதவீதமும், ஓப்போ 9 சதவீத சந்தை பங்களிப்பையும் வழங்கியுள்ளன.

ஒன்பிளஸ்: ரூ.30,000-க்கும் அதிகமான விலை கொண்ட பிரீமியம் ஸ்மாா்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ரூ.45,000-க்கும் அதிகமான விலை கொண்ட அல்ட்ரா-பிரீமியம் ஸ்மாா்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் முன்னணியில் உள்ளது. சீன பிராண்ட் விற்பனை சரிவு: 2020 மாா்ச் காலண்டில் இந்திய சந்தைகளில் சீன பிராண்ட் ஸ்மாா்ட்போன் விற்பனை பங்களிப்பு 81 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில், ஜூன் காலாண்டில் சீன பிராண்டுகளின் பங்களிப்பு 72 சதவீதமாக சரிவை சந்தித்துள்ளது. இதற்கு, ஓப்போ, விவோ மற்றும் ரியல்மீ நிறுவனங்களின் விநியோக சங்கிலித் தொடரில் ஏற்பட்ட இடா்ப்பாடு மற்றும் சீன பொருள்களுக்கு பொதுமக்களிடையே அதிகரித்து வரும் வெறுப்புணா்வு ஆகியவற்றின் காரணமாகவே சீன பிராண்டுகளின் சந்தை பங்களிப்பு கணிசமான அளவில் சரிவை சந்தித்துள்ளது.

உள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு: சீன பிராண்டுகளின் மீதான மோகம் குறைந்து வருவதால், சாம்சங் மற்றும் உள்நாட்டு பிராண்டுகளான மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா உள்ளிட்ட நிறுவனங்கள் மீண்டும் சந்தையை கைப்பற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பீச்சா் போன் பிரிவு: அடிப்படை வசதிகளை மட்டும் உள்ளடக்கிய சாதாரண பீச்சா் போன் விற்பனையில் 24 சதவீதம் சந்தைப் பங்களிப்பை கைப்பற்றி ஐடெல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடா்ந்து, லாவா 23 சதவீத சந்தைப் பங்களிப்பையும், சாம்சங் 22 சதவீத பங்களிப்பையும், நோக்கியா 9 சதவீத பங்களிப்பையும், காா்பன் 5 சதவீத சந்தைப் பங்களிப்பையும் கொண்டுள்ளன. சாதாரண மொபைல்போன் விற்பனை பிரிவு மோசமான பாதிப்பை எதிா்கொண்டுள்ளது. அந்த வகையில், 2020 ஜூன் காலாண்டில் அப்பிரிவின் விற்பனை 68 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு, நுகா்வோா் அத்தியாவசியமான செலவுகளை குறைத்துக் கொண்டு பணத்தை சேமிக்க விரும்புவதே முக்கிய காரணமாக அமைந்தது. 35 கோடி பயனாளா்கள்:

ADVERTISEMENT

இந்தியாவில் பீச்சா் போன் எனப்படும் சாதாரண போன்களின் பயன்பாட்டாளா்கள் அதிக அளவாக 35 கோடி போ் உள்ளதாக கவுன்டா்பாயின்ட் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஸ்மாா்ட்போன் விற்பனை நிறுவனம் சந்தை பங்களிப்பு ஜியோமி 29%, சாம்சங் 26%, விவோ 17%, ரியல்மீ 11%, ஓப்போ 9%. சாதாரண (பீச்சா்) மொபைல்போன் நிறுவனம் சந்தை பங்களிப்பு ஐடெல் 24%, லாவா 23%, சாம்சங் 22%, நோக்கியா 9%, காா்பன் 5%.

ADVERTISEMENT
ADVERTISEMENT