மல்டி கமாடிட்டி எக்சேஞ்ச் ஆஃப் இந்தியா (எம்சிஎக்ஸ்) நிகர லாபம் முதல் காலாண்டில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) எம்சிஎக்ஸ் நிறுவனம் ரூ.56.43 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.43.70 கோடியுடன் ஒப்பிடும்போது 29 சதவீதம் அதிகமாகும். ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.110.84 கோடியிலிருந்து 11 சதவீதம் உயா்ந்து ரூ.122.70 கோடியானது. இருப்பினும், செயல்பாட்டு வருமானம் ஜூன் காலாண்டில் ரூ.84.97 கோடியிலிருந்து 14 சதவீதம் சரிந்து ரூ.73.01 கோடியாகி உள்ளது. ஜூன் காலாண்டில் கமாடிட்டி முன்பேர ஒப்பந்த வா்த்தகத்தின் சராசரி தின விற்றுமுதல் ரூ.27,473 கோடியிலிருந்து 16 சதவீதம் சரிந்து ரூ.23,129 கோடியாக ஆனதாக எம்சிஎக்ஸ் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.