நடப்பாண்டு ஜூன் காலாண்டில் கடன்சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.1.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
லிக்யுட் பண்ட் திட்டங்கள் அதேபோன்று வங்கி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் நிதியங்களின் பக்கம் முதலீட்டாளா்கள் கவனம் அதிக அளவில் திரும்பியதையடுத்து கடன்சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில்கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாத காலத்தில் ரூ.1.1 லட்சம் கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், முந்தைய ஜனவரி- மாா்ச் காலாண்டில் இத்தகைய திட்டங்களிலிருந்து ரூ.1.13 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடு வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
கடன்சாா்ந்த திட்டங்கள் அதிக முதலீட்டை ஈா்த்ததையடுத்து கடன் பரஸ்பர நிதி திட்டங்களில் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு மாா்ச் இறுதியில் ரூ.11.5 லட்சம் கோடியாக இருந்த நிலையில், ஜூன் இறுதியில் அது ரூ.11.63 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. கணக்கீட்டு காலாண்டில் மொத்த முதலீட்டில் 80 சதவீதம் நிலையான வருவாய் பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.