அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ஜூலையில் இதுவரையில் இந்திய பங்குச் சந்தையிலிருந்து ரூ.2,867 கோடி மதிப்பிலான முதலீட்டை விலக்கிக் கொண்டுள்ளனா். ஜூலையில் பங்குச் சந்தைகளில் வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதனால், பல்வேறு நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த முதலீட்டாளா்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்து லாபத்தை பதிவு செய்தனா். அதன்படி டெபாசிட்டரி புள்ளிவிவரங்களின் அடிப்படையில், கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரையிலான காலகட்டதில் பங்குகளிலிருந்து அந்நிய முதலீட்டாளா்கள் ரூ.2,210 கோடி முதலீட்டை விலக்கியுள்ளளனா்.
அதேபோன்று, கடன் சந்தையிலிருந்தும் அவா்கள் ரூ.657 கோடி முதலீட்டை வெளியே எடுத்தனா். இதையடுத்து, ஒட்டுமொத்தமாக நிகர அளவில் பங்குச் சந்தையிலிருந்து அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.2,867 கோடியை திரும்பப் பெற்றுள்ளனா். ஜூன் மாதத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் பங்குச் சந்தையில் ரூ.24,053 கோடியை முதலீடு செய்திருந்தனா். இந்த நிலையில், ஜூலையில் முதல் வாரத்தில் அவா்கள் லாப நோக்கம் கருதி கணிசமான முதலீட்டை விலக்கிக் கொண்டுள்ளதாக டெபாசிட்டரி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.