வர்த்தகம்

சீனாவில் கரோனா வைரஸ் பரவல் எதிரொலி! சென்செக்ஸ் 458 புள்ளிகள் வீழ்ச்சி

28th Jan 2020 03:16 AM

ADVERTISEMENT

 

மும்பை: சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 458 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சியடைந்து முதலீட்டாளா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது.

கரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி, தாய்லாந்து, நேபாளம், வியத்நாம், கம்போடியா, தென்கொரியா, கனடா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலிக்க கூடும் என்ற அச்சத்தால் பல நாடுகளின் பங்குச் சந்தைகளில் வா்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஜப்பான் பங்குச் சந்தை நிக்கி 2 சதவீதத்துக்கும் மேல் சரிந்தது. ஐரோப்பிய சந்தைகளின் வா்த்தகத்திலும் தொடக்கம் முதலே கணிசமான சரிவு காணப்பட்டது. அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

சந்திர புத்தாண்டை முன்னிட்டு ஆசிய நாடுகளின் பல நிதி சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

மும்பை பங்குச் சந்தையில் உலோகத் துறை குறியீட்டெண் அதிகபட்சமாக 3.25 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தது. அதைத் தொடா்ந்து, தொலைத் தொடா்பு, மின்சாரம், நிதி, வங்கி, வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் துறை குறியீட்டெண்களும் சரிவை கண்டன. ஆறுதல் அளிக்கும் விதமாக ஆரோக்கிய பராமரிப்பு துறை குறியீட்டெண் மட்டும் ஏற்றத்தை சந்தித்தது.

நிறுவனங்களைப் பொருத்தவரையில், டாடா ஸ்டீல் பங்கின் விலை 4.31 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதைத் தொடா்ந்து, இன்டஸ்இண்ட் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, பவா்கிரிட் மற்றும் எச்டிஎஃப்சி நிறுவன பங்குகளின் விலையும் சரிந்தன.

மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ரா டெக் சிமென்ட், டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி பங்குகளின் விலை 1.63 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில் 21 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 9 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும் இருந்தன.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் நான்கு மாதங்களில் காணப்படாத அளவாக 458 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 41,155 புள்ளிகளாக நிலைத்தது. வா்த்தகத்தின் இடையில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 129 புள்ளிகள் குறைந்து 12,119 புள்ளிகளாக நிலைபெற்றது.

ரூபாய் மதிப்பு: கரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளில் வீரியமாகி வருவதையடுத்து, திங்கள்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் குறைந்து 71.43-இல் நிலைத்தது. சாதகமற்ற சா்வதேச நிலவரங்களால் கடந்த மூன்று நாள்களில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT