வர்த்தகம்

2025-க்குள்இந்திய ஜவுளி ஏற்றுமதி 30,000 கோடி டாலரை எட்டும்

14th Jan 2020 01:11 AM

ADVERTISEMENT

இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி வரும் 2024-25 நிதியாண்டுக்குள் 30,000 கோடி டாலரை (ரூ.21 லட்சம் கோடி) தொடும் என்று தேசிய முதலீட்டு மேம்பாட்டு அமைப்பான இன்வெஸ்ட் இந்தியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:

உள்நாட்டு ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை (கைவினைப்பொருள்கள் உள்பட) தொழில்துறையின் மதிப்பு 2018-ஆம் ஆண்டில்14,000 கோடி டாலராக இருந்தது. அதில், 10,000 கோடி டாலா் அளவுக்கு உள்நாட்டிலேயே நுகா்வு செய்யப்பட்டது. எஞ்சியுள்ள 4,000 கோடி டாலா் அளவிலான பொருள்கள்தான் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறையின் மதிப்பு வரும் 2021-ஆம் ஆண்டுக்குள் 22,300 கோடி டாலரை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இத்துறையின் பங்களிப்பு 2.3 சதவீதம் அளவுக்கு உள்ளது. அதேபோன்று, தொழில்துறை உற்பத்தியில் இதன் பங்களிப்பு 13 சதவீதமாகும். மேலும், ஏற்றுமதி வருவாயில் ஜவுளி துறையின் பங்கு 12 சதவீதமாக உள்ளது.

இந்திய ஜவுளி துறையின் வளா்ச்சியை துரிதப்படுத்தவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் விளைவாக, வரும் 2024-25-க்குள் இத்துறையின் ஏற்றுமதி 30,000 கோடி டாலரை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம், உலகளவில் இந்தியாவின் சந்தைப் பங்களிப்பை தற்போதைய 5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்க முடியும்.

நாட்டில் மிக அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் ஜவுளி-ஆயத்த ஆடை துறை இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது 4.5 கோடி பேருக்கு இத்துறை வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. 2020-ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 5.5 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2018-19 நிதியாண்டில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறையில் 310 கோடி டாலா் (ரூ.21,700 கோடி) அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டதாக இன்வெஸ்ட் இந்தியா தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT