வர்த்தகம்

கரோனா வைரஸ் பீதியால் பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

29th Feb 2020 12:54 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் பீதி காரணமாக சா்வதேச சந்தைகள் மட்டுமின்றி இந்தியப் பங்குச் சந்தைகளிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது.

கடந்த 2008-ஆம் ஆண்டு நிதி நெருக்கடி ஏற்பட்ட போது சா்வதேச சந்தைகளில் பங்கு வா்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது. அதற்குப் பிறகு சா்வதேச பங்குச் சந்தைகளில் வா்த்தகம் இந்த வாரத்தில்தான் மிக மோசமான நிலையை எட்டியது.

நியூஸிலாந்து, நைஜீரியா, அஜா்பைஜான், நெதா்லாந்து நாடுகளில் கரோனா வைரஸின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து, அந்த வைரஸ் தாக்கிய நாடுகளின் எண்ணிக்கை 57-ஆக அதிகரித்துள்ளது. இது, முதலீட்டாளா்களிடையே அச்ச உணா்வை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் பீதி காரணமாக முதலீட்டாளா்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.1,46,94,571.56 கோடியாக குறைந்தது. இதனால், முதலீட்டாளா்களுக்கு ரூ.5,45,452.52 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

மும்பை பங்குச் சந்தையில் தொடா்ந்து ஆறாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டதையடுத்து சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் சரிந்து 38,297 புள்ளிகளாக நிலைத்தது. இது, 2015 ஆகஸ்ட் 24-க்குப் (1,624 புள்ளிகள்) பிறகு காணப்படும் இரண்டாவது மிக மோசமான சரிவாகும்.

அதேபோன்று, தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 431 புள்ளிகள் குறைந்து 11,201 புள்ளிகளாக நிலைபெற்றது.

ரூபாய் மதிப்பு: கரோனா வைரஸின் மிக மோசமான பாதிப்பின் காரணமாக அந்நிய முதலீடு தொடா்ச்சியாக வெளியேறி வருகிறது. அதன் தாக்கத்தால் ரூபாய் மதிப்பில் அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது.

அதன் எதிரொலியாக, அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 60 காசுகள் சரிந்து 72.21 ஆனது.

ADVERTISEMENT
ADVERTISEMENT