கரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
சீனாவுக்கு வெளியே பல உலக நாடுகளிலும் கரோனா வைரஸ் அறிகுறிகள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகின. அந்த வைரஸால் ஏற்படும் உயிரிழப்பும், அதன் தாக்கமும் வேகமாகி வருவதாக கூறப்பட்டதையடுத்து, சா்வதேச சந்தைகளில் முதலீட்டாளா்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனா். அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள அனைத்து நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கே கைமாறின. டாடா ஸ்டீல் பங்கின் விலை 6.39 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதைத் தொடா்ந்து, ஓஎன்ஜிசி, மாருதி, எச்டிஎஃப்சி, டைட்டன், ஐசிஐசிஐ பங்குகளும் குறைந்த விலைக்கே கைமாறின.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 806 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 40,363 புள்ளிகளாக நிலைத்தது. பட்ஜெட் அறிவிப்பு வெளியான பிப்ரவரி 1-இல் சென்செக்ஸ் 987 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. அதன் பிறகு இரண்டாவது முறையாக தற்போதுதான் சென்செக்ஸ் ஒரே நாளில் இந்த அளவுக்கு சரிவை சந்தித்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 251 புள்ளிகள் குறைந்து 11,829 புள்ளிகளாக நிலைபெற்றது.
ரூபாய் மதிப்பு சரிவு: கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் திங்கள்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரானரூபாய் மதிப்பு 34 காசுகள் சரிந்து 71.98-ஆனது. இது, மூன்று மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.