பங்குச் சந்தை 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நேர்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 259.33 புள்ளிகள் உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தில் நிலைபெற்றது. இதேபோல தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டியும் 59.40 புள்ளிகள் உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தில் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தை குறிப்புகளும், உள்நாட்டு பொருளாதார தரவுகளும் நேர்மறையாக இருந்தன. இந்த நிலையில், அமெரிக்க அரசு கரோனா தொற்றுக்கான நிவாரண நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இவை அனைத்தும் சந்தைக்கு மேலும் உற்சாகத்தை அளித்ததைத் தொடர்ந்து, பங்குச் சந்தை மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.187.23 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,188 பங்குகளில் 1,553 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,472 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 163 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 294 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 402 பங்குகள் வெகுவாக உயர்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பர் சர்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு வர்த்தக முடிவில் ரூ.187.23 லட்சம் கோடியாக இருந்தது.
5-ஆவது நாளாக ஏறுமுகம்: சென்செக்ஸ் காலையில் 112.87 புள்ளிகள் கூடுதலுடன் 47,466.62-இல் தொடங்கி 47,361.90 வரை கீழே சென்றது. பின்னர் அதிகபட்சமாக 47,714.55 வரை உயர்ந்து முந்தைய வரலாற்றுச் சாதனை அளவை உடைத்து புதிய சாதனை அளவைப் பதிவு செய்தது. இறுதியில் 259.33 புள்ளிகள் உயர்ந்து 47,613.08-இல் நிலைபெற்றது. இதன் மூலம் சென்செக்ஸ் தொடர்ந்து 5-ஆவது நாளாக எழுச்சி பெற்றுள்ளது.
இன்டஸ்இண்ட் பேங்க் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் இன்டஸ்இண்ட் பேங்க் 5.41 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது.
இதற்கு அடுத்ததாக ஆக்ஸிஸ் பேங்க், டெக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்சிஎல் டெக், எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, ஐடிசி ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன. இன்ஃபோஸிஸ், கோட்டக் பேங்க், டிசிஎஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.
நெஸ்லே இந்தியா வீழ்ச்சி: அதே சமயம், நெஸ்லே இந்தியா 1.74 சதவீதம், என்டிபிசி 1.69 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக பவர் கிரிட், டாக்டர் ரெட்டீஸ், ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, எம் அண்ட் எம் ஆகியவையும் சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 815 பங்குகள் ஆதாயம் பெற்றன. 916 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி 59.40 புள்ளிகள் (0.43 சதவீதம்) உயர்ந்து 13,932.60 -இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது 13,859.90 வரை கீழே சென்ற நிஃப்டி பின்னர் 13,967.60 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 22 பங்குகள் ஆதாயம் பெற்றன. 27 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. அல்ட்ரா டெக் சிமெùண்ட் மாற்றமின்றி 5,141. 95-இல் நிலைபெற்றது. ஆட்டோ, மீடியா, மெட்டல், பார்மா குறியீடுகள் சரிவைச் சந்தித்தன.
அதே சமயம், பேங்க், ஃபைனான்சியல் சர்வீசஸ் குறியீடுகள் 1-1.50 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.