வர்த்தகம்

புதிய வரலாற்று உச்சம்: சென்செக்ஸ் 506 புள்ளிகள் அதிகரிப்பு

 நமது நிருபர்

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை எழுச்சி பெற்று நேர்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 505.72 புள்ளிகள் உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 140.10 புள்ளிகள் உயர்ந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் ஆதரவு தொடர்ந்து இருந்து வரும் நிலையில், ஐடி, வங்கி, நிதி நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்களிடம் போட்டி இருந்தது. மேலும், ஆசிய சந்தைகளும் ஏற்றம் பெற்றிருந்தன. ஜிடிபி தரவுகளும் நேர்மறையாக அமைந்ததால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்தனர் என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு 176.23 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,072 பங்குகளில் 1,922 பங்குகள் ஆதாயம் பெற்றன. 976 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 174 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வர்த்தக முடிவில் சந்தை மூல தன மதிப்பு ரூ.176.23 லட்சம் கோடியாக இருந்தது. 
சன்பார்மா ஏற்றம்: சென்செக்ஸ் காலையில் 286.11 புள்ளிகள் கூடுதலுடன் 44,435.83-இல் தொடங்கி 44,118.10 வரை கீழே சென்றது. பின்னர் அதிகபட்சமாக 44,730.79 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 505.72 புள்ளிகள் உயர்ந்து 44,655.44-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 பங்குகளில் 20 பங்குகள் ஆதாயம் பெற்றன. 10 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் சன்பார்மா 5.51 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், இன்டஸ்இண்ட் பேங்க், டெக் மஹிந்திரா, ஓஎன்ஜிசி, பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஆட்டோ, அல்ட்ரா டெக் சிமெண்ட், எச்டிஎஃப்சி ஆகியவை 2 முதல் 4.50 சதவீதம் வரை உயர்ந்தன.
கோட்டக் பேங்க் சரிவு: அதே சமயம், கோட்டக் பேங்க் 1.40 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக நெஸ்லே இந்தியா, டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், என்டிபிசி ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 140.10 புள்ளிகள் (1.08 சதவீதம்) உயர்ந்து 13,109.05-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் இடம் பெற்றுள்ள 50 முதல் தரப் பங்குகளில் 37 பங்குகள் ஆதாயம் பெற்றன. 12 பங்குகள் வீழ்ச்சியடைந்தன. எஃப்எம்சிஜி குறியீடு தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் பிஎஸ்யு பேங்க் (2.88 சதவீதம்), ரியால்ட்டி (3.33 சதவீதம்), ஐடி (1.87 சதவீதம்) குறியீடுகள் அதிகம் ஏற்றம் பெற்றன. 
சந்தையில் காளையின் ஆதிக்கம் உள்ளது. வரும் நாள்களில் நிஃப்டி 13,200, 13,300 வரை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதே சமயம், 12,790-இல் நல்ல ஆதரவு உள்ளது என்றும் கோட்டக் செக்யூரிட்டீஸின் தொழில்நுட்பப் பிரிவின் நிர்வாக துணைத் தலைவர் ஸ்ரீகாந்த் செüகான் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

SCROLL FOR NEXT